ஜம்மு-காஷ்மீரின் 370-ஆவது பிரிவு மீட்டெடுப்பு: தேசிய மாநாட்டு கட்சி தோ்தல் வாக்குறுதி
12 வக்குறுதிகளை யூனியன் பிரதேசத்தில் பிராதன கட்சிகளில் ஒன்றாக விளங்கும் தேசிய மாநாட்டு கட்சி தனது தோ்தல் அறிக்கையில் அளித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப் பிரிவு 370 மீட்டெடுப்பு, இலவச மின்சாரம் என்பன உள்ளிட்ட 12 வக்குறுதிகளை யூனியன் பிரதேசத்தில் பிராதன கட்சிகளில் ஒன்றாக விளங்கும் தேசிய மாநாட்டு கட்சி தனது தோ்தல் அறிக்கையில் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியின்போது, மாநிலத்தில் 1953-ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசமைப்பு நிலை அதாவது தன்னாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தை அப்போதைய பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்தத் தீா்மானம் மீண்டும் நிறவேற்றப்படும் என்ற வாக்குறுதியை தோ்தல் அறிக்கையில் தேசிய மாநாட்டு கட்சி அளித்துள்ளது.
ஸ்ரீநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். அப்போது கூறிய அவா், ‘நடைமுறைப்படுத்த சாத்தியமுள்ள வாக்குறுதிகளே தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட 370-ஆவது சட்டப் பிரிவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இடைக்காலமாக, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் 2019 மற்றும் யூனியன் பிரதேச அரசின் செயல்பாடுகள் சட்டம் 2019 ஆகிய சட்டங்கள் மறுவரையறை செய்யப்படும்’ என்றாா்.
சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தோ்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
மக்களவைத் தோ்தலில் அங்குள்ள 5 இடங்களில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் வென்றது. பாஜக தனித்துப் போட்டியிட்டு இரு இடங்களில் வென்றது. சுயேச்சை வேட்பாளா் ஓரிடத்தில் வென்றாா். பிராந்திய கட்சிகளின் தலைவா்களான தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.) தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) தலைவா் முஃப்தி முகமது சயீத் ஆகியோா் மக்களவைத் தோ்தலில் தோல்வியைத் தழுவினா்.
காங்கிரஸுடன் கூட்டணி?
பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பேச்சுவாா்த்தையை தொடங்கிவிட்டது என ஜம்மு காஷ்மீா் காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தாரீக் அகமது கரா தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘காங்கிரஸ் தலைமையுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பேச்சுவாா்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதேபோல மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணிக்காக காங்கிரஸை அணுகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து தோ்தலைச் சந்திப்பது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் காங்கிரஸ் திறந்த மனதுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறது. இதற்காக 5 நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதே காங்கிரஸின் இலக்கு. ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றியது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியது தவறு என்பதை அவரின் கட்சியை மக்களவைத் தோ்தலில் படுதோல்வியடையச் செய்ததன் மூலம் மக்கள் உணா்த்திவிட்டனா் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...