
தனியார் பள்ளியில் பயின்று வந்த யுகேஜி குழந்தைகளுக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம், பெற்றோர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தின் பத்லாப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேதனைக்குரிய இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 12-ஆம் தேதியன்று, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கழிப்பறைக்குச் சென்ற அவ்விரு குழந்தைகளையும் பின்தொடர்ந்து சென்ற பள்ளி ஊழியர், அங்கு அந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், அந்த பிஞ்சுக் குழந்தைகள் பள்ளியில் நடந்த சம்பவத்தை தங்கள் பெற்றோரிடம் விவரித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின்பேரில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வரை நேற்று(ஆக. 19) பணியிடைநீக்கம் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். அவருடன் சேர்த்து, வகுப்பறை ஆசிரியரும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த பெண் உதவியாளரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பள்ளியில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணிகளுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மேற்கண்ட நிறுவனம் மீது புகாரளித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், இனிமேல் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் நிகழா வண்ணம் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, புகார் அளிக்கப்பட்ட பின், உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய பட்லாபூர் காவல்துறை பொறுப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று(ஆக. 20) காலை பள்ளி முன்பு திரண்ட ஏராளமான பெற்றோர்கள் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவத்தை கண்டித்து பத்லாப்பூர் பகுதியில் பெற்றோர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
இச்சம்பவத்தை கண்டித்து பத்லாப்பூர் பகுதியில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்படுள்ளது.
ரயில் மறியல் போராட்டத்தால், மும்பை மாநகரின் செண்ட்ரல் லைன் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் பத்லாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 5 விரைவு ரயில்கள் பட்லாப்பூர் செல்லாமல், மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக செண்ட்ரல் ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.