
கேரள திரைப்படத் துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில், மாநில திரைத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் பதவி விலக வேண்டும் என பாஜக இன்று (ஆக. 20) வலியுறுத்தியது.
திரைத் துறையில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்களைக் காப்பதால், அமைச்சர் ஷாஜி பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளீதரன் தெரிவித்தார்.
கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமாவின் தலைமையிலான ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
மலையாள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்தது.
இதில், கேரள திரைப்படத் துறையானது ஒருசில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், புதிதாக வரும் நடிகைகள் வாய்ப்புக்காக எதற்கும் சரணடைவார்கள் என்ற எண்ணம் துறையில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைவதோடு, பணியிடத்தில் தனியுரிமை, சுதந்திரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்களைக் காக்கும் திரைத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, சினிமாத் துறை குற்றங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியக்கூடிய குற்றங்களும் உள்ளன. ஆனால் அரசு மெளனம் காக்கிறது. இது மிகப்பெரிய குற்றச்செயல். மேலும் அமைச்சர் செரியன் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக அவர் பதவியில் குற்றங்கள் நடந்துள்ளன. இதனால் அவர் பதவி விலக வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் இந்தத் தரவுகளை அரசு மறைக்கிறது. முன்னாள் திரைத் துறை அமைச்சர் ஏ.கே. பாலனும் குற்றவாளிகளைக் காப்பாற்றியுள்ளார்.
ஹேமா அறிக்கையின் மீது பினராயி விஜயன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஐந்து ஆண்டுகள் தாமதமானது பெண்கள் மீதான இடதுசாரிகளின் அணுகுமுறைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.