நேரடி பணி நியமனங்கள் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேரடி நியமனத்துக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருக்கிறார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் மத்திய அரசுப் பணியில் நியமிக்கப்படும் நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தது பேசுபொருளானது.
இந்த நிலையில், மத்திய அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை (லேட்ரல் என்ட்ரி) ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில, 2014ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த நேரடி பணி நியமனங்கள், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டு வெளிப்படைத்தன்மையோடு நடத்த முற்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு, எவ்வித இட ஒதுக்கீட்டு முறைகளையும் பின்பற்றாமல், நேரடி நியமனங்கள் மூலம் மிக முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள், குறிப்பாக உதைய் அமைப்பின் தலைவர் பொறுப்பைக் கூட நியமித்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்புகளில் சமூக -நீதியை நலைநாட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது அவசியம் என பிரதமர் கூறியுள்ளதாக, மத்திய அமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில்தான், மத்திய அரசின் பணிகளில் நேரடி நியமனத்துக்கான நடவடிக்கைளை நிறுத்தி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி, மத்திய அரசுப் பணிகளில் 45 நேரடி நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை நேரடியாக மத்திய அரசுப் பணிகளில் நியமிப்பது சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
மத்திய அரசில் பணியாற்ற யுபிஎஸ்சி தேர்வெழுதியவர்கள் மட்டுமல்லாமல், வேண்டிய தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு நேரடியாக பணி வாய்ப்பு வழங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.
நேரடி நியமனத்தின் பின்னணி?
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலர் முதல் துணைச் செயலர்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேரடித் தேர்வு முறையில் நிரப்புவதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.
வழக்கமாக யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக உள்ளவர்களே இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். தற்போது தனியார் துறையைச் சேர்ந்த தகுதியுடைய நபர்களுக்கு இந்தப் பதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இந்த நியமனங்கள் பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கான நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தன.
அதாவது, மத்திய அரசுப் பணியில் 45 நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் அதாவது யுபிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இவர்கள் ரோஸ்டர் சர்வீஸ் முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையல் நியமிக்கப்படுவார்கள். மேலும் தேவைப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு மட்டும் பணி நீடிப்பு வழங்கப்படும்.
இந்த நேரடி பணி நியமனங்கள் மூலம் இட ஒதுக்கீட்டு முறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு முன்னதாக விளக்கம் கொடுத்திருந்தநிலையில், தற்போது நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.