
மத்திய அரசின் நேரடி நியமனத்துக்கு (லேட்டரல் என்ட்ரி) எதிராக கேள்வி எழுப்புவேன் என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் முதல் துணைச் செயலா்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு மத்திய பணியாளா் தோ்வாணையம்(யுபிஎஸ்சி) நேரடித் தோ்வு முறையில் நிரப்புவதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த நியமனங்கள் பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் தோ்வு என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் திங்கள்கிழமை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நேரடி நியமனம் குறித்து செய்தியாளர்களுடன் சிராக் பஸ்வான் பேசியதாவது:
“மத்திய அரசு மற்றும் பிரதமரின் சிந்தனை முற்றிலும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகதான் உள்ளது. நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு பரிசீலிக்கப்படவில்லை என்றால் நானும், எனது கட்சியும் முற்றியும் எதிரானவர்கள். அரசில் அங்கம் வகிக்கும் நாங்கள், இதுகுறித்து கவலையை உரிய துறையிடம் பதிவு செய்துள்ளோம்.
வரும் நாள்களில் நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு கேட்டு வலுவான குரல் எழுப்புவோம். அனைத்துவித அரசுப் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும். அரசுப் பணி நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இடஒதுக்கீடு பின்பற்றுவதை போன்று அனைத்து பணி நியமனத்திலும் அதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
சில நாள்களுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அம்பேத்கர் உருவாக்கிய இடஒதுக்கீடு முறை அப்படியே தொடரும் என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அதனால், நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நேரடி நியமனத்துக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று விமர்சித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.