
வழக்குகளில் நீதிபதிகள் போதிக்கக் கூடாது என்றும், தீர்ப்பில் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு ஒன்றை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், பருவ வயது பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள், பெண்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இதனை கடுமையாக கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தீர்ப்புகளில் திணிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அபய் எஸ், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் இளம் பருவத்தினரின் உரிமைகளை முற்றிலும் மீறுவது எனவும் குறிப்பிட்டனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சிறுவனின் மேல்முறையீட்டு மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் சித்த ரஞ்சன் தாஷ், பார்த்தசாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஆக.20) விசாரித்தது.
2023 அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இவ்வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பருவ வயது பெண்கள், தங்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் சுய மதிப்பைக் காக்கும்பொருட்டு இரண்டு நிமிட ஆசைக்காக தவறாக நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
மேலும், உடலைக் காத்துக்கொள்ளும் வகையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், சமூகத்தின் பார்வையில் பெண்களே நஷ்டமடைந்தவர்களாக அல்லது பாதிக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.
மேலும், சிறுமி அல்லது இளம்பெண்களை மதிக்க வேண்டியது வயது வந்த ஆண்களின் கடமை. அவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் குறிப்பிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.