
புது தில்லி: கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிய தாமதம் ஏன் என்று கொல்கத்தா காவல்துறைக்கும், அரசுக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
இதில், கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் நடந்து சுமார் 12 மணி நேரத்துக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, கொல்கத்தா காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.
மேலும், சம்பவம் நடந்த மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எவ்வாறு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் திடீரென குவிந்தனர். இது பற்றி கொல்கத்தா காவல்துறைக்கு எப்படி எதுவும் தெரியாமல் போயிருக்கிறது? பிறகு காவல்துறை என்னதான் செய்துகொண்டிருக்கிறது? நாங்கள் மிகவும் கவலை அடைகிறோம். அமைதியாக போராடுவோர் மீதுதான் உங்கள் அடக்குமறை செல்கிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்னைக்கு உரியதாகவே இருக்கிறது. பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய பணிக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது, மருத்துவர்கள் அல்லது மக்கள் மீது எந்த அரசும் அதிகாரத்தை ஏவி விடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஆணாதிக்க மனநிலை காரணமாகவே நோயாளிகளின் உறவினர்கள், பெண் மருத்துவர்களை தாக்குகிறார்கள். மருத்துவர்கள் பல்வேறு வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாகவே உள்ளது. இவற்றை தடுக்க, தாக்குதல் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க மற்றொரு வன்கொடுமை சம்பவத்துக்காகக் காத்திருக்க முடியாது. இரவு நேரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஓய்வு அறைகள் கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
கொல்கத்தா பெண் மருத்துவர் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.