
தில்லியில் இருந்து ஜார்கண்ட் திரும்பிய சம்பயி சோரன், பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை என்று செவ்வாய்க்கிழமை இரவு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தில்லியில் தனிப்பட்ட காரணங்களுக்காக 3 நாள்கள் தங்கியிருந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து மூத்த தலைவர் சம்பயி சோரன் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீரென அவர் தில்லிக்கு பயணம் மேற்கொண்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினரால் தனது சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளதாகவும் சம்பயி சோரன் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டார்.
மேலும், சம்பயி சோரன் பாஜகவில் இணையவுள்ளதாகவும், தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தில்லியில் இருந்து ஜார்கண்ட் புறப்படுவதற்கு முன்பு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சம்பயி சோரன், பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும், இதையெல்லாம் யார் பரப்புகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தில்லியில் இருந்து கொல்கத்தா விமான நிலையம் வந்து அங்கிருந்து சொந்த ஊரான சரிகேலாவுக்கு சென்ற சம்பயி சோரனுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
4 எம்எல்ஏக்களுக்கு ஹேமந்த் சோரன் சம்மன்
சம்பயி சோரனுடன் தில்லி செல்லவுள்ளதாக தெரிவித்திருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்எல்ஏக்களான சமீர் மொகந்தி, ராம்தாஸ் சோரன், மங்கள் கலிந்தி மற்றும் சஞ்சீவ் சர்தார் ஆகியோருக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் சம்மன் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வரை 4 எம்எல்ஏக்களும் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய எம்எல்ஏக்கள், தொகுதியில் முழுமையான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.