
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பயி சோரனின் விலகும் முடிவு, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீது அதிருப்தி தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் சம்பயி சோரன், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளதாக தெரிவித்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை இந்தியா கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது, முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க தேவையான 41 இடங்கள் கிடைக்காததால், ஜேஎம்எம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அமைச்சரவையில் காங்கிரஸுக்கு முக்கிய துறைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த குற்றச்சாட்டு தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனால், தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தார். ஜேஎம்எம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சம்பயி சோரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆறு மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ஹேமந்த் சோரன், கடந்த ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதன் பின்னரே ஹேமந்த் சோரன் முதல்வராவார் என்று எதிர்பார்த்த சம்பயி சோரன் இந்த திடீர் மாற்றத்தால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஜேஎம்எம் எம்எல்ஏ ஹெம்ப்ரோம் மூலம் பாஜக மூத்த தலைவர்களுடன் சம்பயி சோரன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதனை சம்பயி சோரன் மறுத்தே வந்தார்.
ஆனால், திடீரென தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட சம்பயி சோரன், கட்சி மீதான அதிருப்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பயி சோரனின் பதிவில், “கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் முதல்வராக நான் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது, ஜூலை 3-ஆம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதுவரை அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் நிகழ்ச்சியை மற்றொருவா் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யுமாறு என்னிடம் கூறினா். நான் அதிா்ச்சியடைந்தேன். எனக்கு பதவி ஆசை இல்லாததால், உடனடியாக ராஜிநாமா செய்தேன். எனினும், எனது சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், அவர் (ஹேமந்த் சோரன்) முதல்வா் நாற்காலியில் மட்டுமே ஆா்வம் காட்டினாா்.
எனது முழு வாழ்க்கையையும் அா்ப்பணித்த கட்சியில் எனக்கு உரிய இடம் இல்லை என்பதை உணா்ந்தேன். இதுபோன்று, நான் எதிா்கொண்ட பல்வேறு அவமானங்களால், மாற்றுப் பாதையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மூன்று வாய்ப்புகள் என்வசம் உள்ளன. அரசியலில் இருந்து விலகுவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பயி சோரன் யார்?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்சவான் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மகன் சம்பயி சோரன். பிகார் மாநில பேரவை உறுப்பினராக முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பயி சோரன், தனி மாநிலம் கோரிய போராட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஷிபு சோரனுடன் இணைந்து போராடியவர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பிரிந்த பிறகு தொடர்ந்து 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 - 2014 காலகட்டத்தில் மாநில போக்குவரத்து மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர். 2019 முதல் போக்குவரத்துத் துறை மற்றும் பட்டியல், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துவந்தார்.
மேலும், தனி மாநிலத்துக்காக போராடிய சம்பயி சோரன், ‘ஜார்க்கண்ட் புலி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா?
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகின்ற டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் போல நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஆளும் இந்தியா கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கான அனைத்து பணிகளையும் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்டு வரும் நிலையில், சம்பயி சோரனின் விலகல் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
சம்பயி சோரனுடன் ஜேஎம்எம் கட்சியின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக சம்பயி சோரன் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் தாமதப்படுத்துவதற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சம்பயி சோரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது விலகல் முடிவை ஜேஎம்எம் திரும்பப் பெற வைக்குமா? அல்லது மகாராஷ்டிரத்தில் ஷிண்டேவை வைத்து ஆட்சியைக் கைப்பற்றியதை போன்று ஜார்க்கண்டிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது விரைவில் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.