சத்தீஸ்கர் மாநிலத்தில் சுதந்திர தின விழாவின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் விடுவிக்கப்பட்ட புறா பறக்காததால், காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புறா பறக்காமல் தரையில் விழும் விடியோ இணையத்தில் வைரலான நிலையில், புறாவை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.
முங்கேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான புன்னுலால் மோலே கலந்து கொண்டார்.
தேசியக் கொடி ஏற்றிய பிறகு, எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் புறாக்களை பறக்கவிட்டனர். ஆனால், காவல் கண்காணிப்பாளர் கைகளில் இருந்த புறா மட்டும் பறக்காமல் தரையில் விழுந்தது. இந்த காணொலி இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “சுதந்திர தினம் போன்ற முக்கியமான தேசிய விழாவின்போது, புறா தரையில் விழுந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட நிர்வாகத்தின் விழாவில், நோய்வாய்ப்பட்ட புறாவை பறக்க விட்டதால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது.
விழாவின் சிறப்பு விருந்தினரான எம்எல்ஏவின் கைகளால் இந்த புறாவை பறக்கவிட்டிருந்தால், நிலைமை மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கும். இந்த புறாவை கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட அதிகார், தனது பணியை பொறுப்பாக செய்யவில்லை. அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.