
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அச்சுறுத்தல் காரணமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் வேட்பாளர்கள் குறித்த முழு விவரம் தெரிய வரும்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இதற்காக 1,600 மத்திய ஆயுத காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தீவிரவாத அமைப்புகள் இதனை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அவர்களைத் தாக்கத் திட்டமிடுவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தான் ராணுவ ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள், தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்து, தாக்குதலுக்குத் திட்டமிடுமாறு தங்கள் அமைப்பினருக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
எனவே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எக்ஸ் முதல் இஸட் வரையிலான பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.