
ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவுக்கு வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பாஜகவின் மாநிலத் தேர்தல் குழுவின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(ஆகஸ்ட் 22) தொடங்கியது.
இதில் முன்னாள் ஹரியாணா முதல்வரும் மத்திய அமைச்சருமான மனோகர் லால் கட்டர் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 25-30 வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர். விரைவில் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இறுதிக்காக சமர்ப்பிக்கப்படும்.
மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். மேலும் அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் தெளிவாகத் தெரியும். ஹரியாணா மக்களின் முதல் தேர்வாக பாஜக முன்னிலை வகிக்கிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் பல முறை அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட்டது.
ஆனால் பாஜக அம்பேத்கர் வகுத்த கொள்கைகளை எப்போதும் கடைப்பிடித்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.