விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹரியாணா பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை - காங். தனித்து போட்டி!

ஹரியாணாவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 8:53 am

DIN

ஹரியாணாவில் அக்டோபர் 1-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4 -ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நாள் நெருங்கிவிட்ட நிலையில், ஹரியாணாவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தேர்தலுக்குப் பின், பாஜக - ஜேஜேபி கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது. இந்த நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் உடன்படிக்கை ஏற்படாததால் இந்த கூட்டணி முறிந்தது. ஜேஜேபி பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவைத் திரும்பப் பெற்ற நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சியத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான குமாரி ஷேல்ஜா, மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குமாரி ஷேல்ஜா

குமாரி ஷேல்ஜா

“தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் மாநில அளவில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்கள் கூட்டணி குறித்து தனித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால், ஹரியாணாவில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.

ஹரியாணா மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர். கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இங்கு பாஜகவுக்கு அடிமட்ட அளவில் ஆதரவு இல்லை. உள்கட்சி பூசலும் கடுமையாக நிலவுகிறது.”

“காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அக்னிபத் திட்டம் விலக்கி கொள்ளப்படுவதையும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படுவதையும் காங்கிரஸ் உறுதிசெய்யும்.

ஹரியாணாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.