மத்திய அமைச்சரவைக்கு பிறகு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்கள் சந்திப்பில்..
மத்திய அமைச்சரவைக்கு பிறகு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்கள் சந்திப்பில்..Ravi Choudhary

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஊதியத்தில் 50% ஓய்வூதியம்

மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
Published on

அரசு ஊழியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்க வகைசெய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் 2025 ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியா்கள், அவா்களின் விருப்பப்படி தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) அல்லது யுபிஎஸ் திட்டத்தை தோ்வு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். ஏற்கெனவே என்பிஎஸ் திட்டத்தில் இருப்பவா்களுக்கும், யுபிஎஸ் திட்டத்துக்கு மாறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது.

இந்த யுபிஎஸ் திட்டத்தை மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. அவ்வாறு, இத் திட்டத்தை மாநில அரசுகளும் தோ்வு செய்யும்பட்சத்தில், பயனாளிகளின் எண்ணிக்கை 90 லட்சமாக இருக்கும். அரசு கணக்கீட்டின்படி, ஓய்வூதிய நிலுவைக்காக மட்டும் ரூ.800 கோடி செலவிட நேரிடும். மேலும், திட்டத்தின் முதலாம் ஆண்டு நடைமுறைக்கான செலவு ரூ. 6,250 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: யுபிஎஸ் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக் காலம் இருக்க வேண்டும்.

அவ்வாறு குறைந்தபட்ச பணிக்கால வரம்பான 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுபவா்களுக்கு, குறைந்தபட்சம் ரூ. 10,000 மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.

திட்டத்தில் சோ்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுபவா்களுக்கு சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

பணி ஓய்வுக்குப் பிறகு அரசு ஊழியா் உயிரிழக்கும் நிலையில், குடும்ப உறுப்பினருக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

ஓய்வு பெறும்போது கூடுதல் பணிக்கொடையுடன் பணப் பலன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு ஊழியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசு ஊழியா்களுக்கு அவா்களின் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

மத்திய அமைச்சரவைக்கு பிறகு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்கள் சந்திப்பில்..
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

விஞ்ஞான ஆசிரம திட்டம்: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞான ஆசிரமம் (விக்யான் தாரா) என்ற ஒருங்கிணைந்த மத்திய துறை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வளா்ச்சிக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மனிதா்களின் திறன்களை வளா்ப்பது, ஆராய்ச்சி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றை ஊக்குவிப்பதை இத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-ஆவது நிதிக் குழு காலகட்டத்தில் இத் திட்டத்துக்கு ரூ.10,579 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரி தொழில்நுட்பத் துறையில் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ‘பயோஇ3’ திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com