நாம் நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? முன்பெல்லாம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடைபெறும், இப்போது தொடர்ச்சியாகப் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் - கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
கொல்கத்தாவில் மருத்துவமனையிலேயே பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விதத்தை நினைத்தாலே பதறுகிறது. இந்தக் கொலைக்குப் பின் என்னென்னவோ மர்மங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னமும் எல்லாருமாக விசாரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
உத்தரகண்ட், பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் என இன்னும் பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. மகாராஷ்டிரத்தில் இரு சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்குப் பள்ளியிலேயே வன்கொடுமை. அஸ்ஸாமில் 12 வயதுச் சிறுமிக்குப் பெரும் பாதிப்பு.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலையில் நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியேதான், மகாராஷ்டிரத்தில் இரு சிறுமிகளுக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறார்கள். ஏனென்றால், வங்கத்தில் எதிர்க்கட்சி, இங்கே ஆளுங்கட்சி.
ஏதோ வட மாநிலங்களில் மட்டும்தான் இப்படியாகப்பட்ட கொடுமையென்றில்லை. இங்கேயும் பாப்பாநாட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை. இவர்களுக்கெல்லாம் எப்படி இந்தத் துணிச்சல் பிறக்கிறது?
பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடத்தி சின்னஞ்சிறு மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. நல்லவேளையாக ஒரே ஒரு மாணவி முன்வந்து புகார் தந்ததால் ஒரு கும்பல் சிக்கியிருக்கிறது. இப்போது நிறைய மாணவிகள் புகார் தந்துகொண்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென செத்தும்போய்விட்டார்.
ஒன்று மட்டும் புரியவில்லை. எந்தவித அனுமதியுமில்லாமலேயே மாணவிகளை அழைத்து இத்தனை பள்ளிகளில் முகாம்களை, என்சிசியின் பெயரால் நடத்தியிருக்கிறார்களே? எப்படி முடிந்தது? இவற்றையெல்லாம் கவனிக்கவோ, கண்காணிக்கவோ எந்த ஏற்பாடுமில்லையா? வீதியில் கூட்டமாகத் திரண்டு ஒரு கொடியேற்ற வேண்டும் என்றால்கூட பக்கத்துக் காவல்நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார்களே? நடப்பதெல்லாம் நடந்துகொண்டிருக்கும், என்றைக்காவது எவனாவது வலிய வந்து சிக்கும்போது மட்டும் தாம் தூம் என்று விசாரணைகள் நடைபெறும். பிறகு வழக்கம்போல கொஞ்ச நாளில் நம் மக்களுக்கும் எல்லாம் மறந்துபோய்விடும்.
பேசாமல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல ஏதேனும் அதிரடியான தண்டனைகளை விதிக்கலாம். எது எதற்கோ அவசர அவசரமாக சட்டங்களைத் திருத்துகிறவர்கள் இதற்காகவும் சட்டங்களில் திருத்தங்கள் செய்யலாம்.
நாட்டுக்குள் உலவும் இந்தக் காட்டுமிராண்டிகளை என்னதான் செய்வது? (காட்டுமிராண்டிகள் என்று காடுகளில் வசிக்கக்கூடிய யாரையும் தாழ்த்திச் சொல்ல முடியாது, கூடவும் கூடாது. காடுகளில் இப்படியெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை).
ஆமாம், இந்த உச்ச நீதிமன்றம், கொல்கத்தா பெண் மருத்துவர் வல்லுறவுக் கொலையைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறதே, மணிப்பூரில் நடந்ததே மகா கொடுமை அந்தப் பெண்களுக்கு, அத்தனை ஆண்களுக்கு நடுவே அம்மணமாக வீதிவழியே இழுத்துச் செல்லப்பட்டு, அதெல்லாம் கேட்க மாட்டார்களா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாமே குற்றங்கள்தான், எந்த மாநிலமாக இருந்தாலும், இவற்றிலென்ன செலக்டிவ்னஸ்?
மகாத்மா காந்தி எப்பவோ சொல்லியிருக்கிறார்: எப்போது பெண்கள் நள்ளிரவில் நடுவீதிகளில் நகைகளை அணிந்தபடி அச்சமின்றிச் சுதந்திரமாக நடந்துசெல்ல முடிகிறதோ அந்த நாள்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த நாள்.
இப்போது நாடு போகிறபோக்கில் பகலிலேயே தனியாகப் பெண்கள் போய் வருவது பாதுகாப்பானது அல்ல என்றாகிவிடும் போல (இரவில் ஆண்கள் சென்றுவருவதேகூட பாதுகாப்பானது அல்ல, அடித்துப் பறித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்). மகாத்மா காந்தி சொன்ன அந்த சுதந்திரம் எப்போதுதான் கிடைக்கப் போகிறதோ? அப்புறம், மகாத்மா காந்தியா? அவர் யாரென்று கேட்காமல் இருந்தால் சரி.
***
அந்த 68 பக்கங்கள்!
2017-ல் நடிகையொருவருக்கு எதிராக இழைக்கப்பட்ட மிக மோசமான கூட்டுப் பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து, பிரபலமான நடிகர் ஒருவர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இ.ன்.ன.மு.ம் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கேரள உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி, விரிவான அறிக்கையொன்றை 2019-ல் அரசிடம் அளித்தது.
பெரும் வற்புறுத்தல்களுக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகளாக வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த அறிக்கை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. எல்லாம் ஏற்கெனவே பலருக்கும் தெரிந்த ரகசியங்கள்தான். திரையுலகில் பிரபலமான நடிகைகளில் தொடங்கி கடைசி நிலையில் இருக்கக் கூடியவர்கள் வரை பெண்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை சுமாராக வெளிப்படுத்தியிருக்கிறது அறிக்கை. ‘சில நடிகர்கள் கூட்டத்தின் ஆதிக்கம்’ பற்றியும் குற்றம் சாட்டியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, அப்படியா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே! என்று மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) மறுத்திருக்கிறது.
290 பக்க நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையில் 68 பக்கங்கள் வெளியிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சில பேரைப் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்களாம். அதை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள்? பிறகு எதற்காக விசாரணை கமிஷன்? என்று நீதிமன்றமும் கேட்டிருக்கிறது. அதானே, எல்லாம் ரகசியம் என்றால் என்ன வெங்காயத்துக்கு விசாரணை?
ஆமாம், மலையாளத் திரையுலகம்தான் இப்படி என்றால் மற்ற திரையுலகங்கள் எல்லாம் ரொம்பப் பிரமாதமா? எல்லா இடங்களிலும் விசாரணை கமிஷன்கள் வைத்தால், இந்தப் பெண்களும் ஒருவேளை உண்மைகளைத் தெரிவிக்க முன்வந்தால்... முன்வந்தால்...
* * *
திராவிட முருகன்!
கடவுள் இல்லை என்றார் பெரியார், கடவுள் இல்லை... கற்பித்தவன்.... என்றது திராவிடர் கழகம். பின்னாளில் திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார் அண்ணா.
பிறகு தி.மு.க.விலிருந்து பிரிந்து அல்லது வெளியேற்றப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய எம்.ஜி.ஆரோ மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றுவந்தார். அதிமுகவைப் பொருத்தவரை கடவுள் மறுப்பு கண்டுகொள்ளப்படவில்லை. பின்னாளில் வந்த ஜெயலலிதாவுமே தீவிரமான கடவுள் பக்தி கொண்டவர்தான்.
கிளைத்த திராவிட இயக்கக் கட்சிகள் யாவும் திசைக்கொன்றாகின இவ்விஷயத்தில்.
திராவிட மாடலை முன்வைக்கும் திமுகவில் எல்லாரும் கோவிலுக்குப் போவதும் வழிபடுவதுமாக இருந்தாலும் கருணாநிதி இருந்தவரை கடவுள் மறுப்பில்தான் இருந்தார். அவரும் போனதில்லை. மற்றவர்கள் போவதையும் விரும்புவதில்லை. ஆனாலும், அததது அதுபாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. அவர் காலத்துக்குப் பிறகு இவற்றைப் பற்றியெல்லாம் திமுகவிலேயே யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை; கவலைப்படுவதுமில்லை.
திராவிட இயக்கங்களின் ஒரே வாரிசாகக் கூறிக்கொள்ளும் திமுகவின் அரசே, இப்போது அடுத்த லெவலுக்குச் சென்று தமிழ்க் கடவுள் முருகனுக்காகப் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நாள் முன் வரையிலும் நாம் தமிழர் கட்சி சீமான்தான் முன்தோன்றிய மூத்தகுடியென முருகக் கடவுளையும் வேலையும் தூக்கிப் பிடித்து அரசியல் செய்துகொண்டிருந்தார். திடீரென இப்போது திமுக வேலை உயர்த்தியிருக்கிறது. வடக்கே ராமர், தெற்கில் முருகனா? தெரியவில்லை. அரசியலா, ஆன்மிகமா? அல்லது ஆன்மிக அரசியலா? திராவிட முருகனுக்கே வெளிச்சம்!
* * *
கொடியேத்துனது ஒரு குத்தமாய்யா?
திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் டீசர், முதல் பார்வை, முதல் பாடல், லிரிக்ஸ், பாடல் விடியோ இப்படி ஏதாவதொன்று ஒன்று கிடக்க ஒன்று வெளியாகிக்கொண்டே இருக்கும். மீடியாக்களிலும் அதகளப்படும்; அந்த டெம்போவை மெயின்டெய்ன் செய்வதற்காக.
நடிகராக இருந்து கட்சி தொடங்குவதாலோ என்னவோ இன்ஸ்டால்மென்ட்டில் பெயர் அறிவிப்பு, கொடி ரிலீஸ், கொள்கை விடியோ பாடல் வெளியீடு என்று வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.
சில நாள்கள் முன் விழா நடத்திக் கட்சியின் கொடியேற்றினார்.
அவ்வளவுதான். கொடியில் யானைகள் இருக்கின்றன. இதெல்லாம் இன்னொரு கட்சியிடமும் இருக்கிறது. இது நம்ம ஊரு வாகைப் பூ அல்ல, வேறு ஏதோ ஒரு வெளிநாட்டுப் புஷ்பம். கொடிகூட ஐரோப்பாவிலுள்ள ஒரு நாட்டில் பறந்துகொண்டிருப்பதைப் போலவே இருக்கிறது (நல்லவேளை, கொடிக்கம்பம் எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான்) என்று திட்டமிட்டோ, திட்டமிடாமலோ சமூக ஊடகங்களில் ஆளாளுக்குக் கழுவி ஊற்றுகிறார்கள் அல்லது கழுவி ஊற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இனிமேல் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் பேசாமல் முதலிலேயே கொடியை டம்மியாக ரிலீஸ் செய்து, இந்தக் கருத்துக் கந்தசாமிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்டுத் தேவையான திருத்தங்களுடன் அதிகாரப்பூர்வ கொடி ரிலீஸ் வைத்துக் கொள்ளலாம், சும்மா ஒரு யோசனைதான்.
நம்ம நாட்டில் அரசியல் கட்சி தொடங்கி வெற்றி பெற்ற நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற நிலையில், ஒரு படத்துக்கு 100 கோடிக்கு மேலே 200 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிற நடிகர் விஜய், அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு எதற்காக அரசியல் கட்சி தொடங்குகிறார்? ம். ஏதாவது இருக்கும், எப்படியும் ஒருநாள் பூனை வெளியே வரத்தானே போகிறது!
*