தொகுதி இழுபறி: காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி பேச்சுவார்த்தை!

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
jammu kashmir
கோப்புப்படம்dotcom
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, பிராந்தியம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதன்பிறகு, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு முதன்முறையாக பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

jammu kashmir
ஜம்மு-காஷ்மீர்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வாபஸ்! ஏன்?

ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதில் முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(ஆக. 28) கடைசி நாள்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா அறிவித்தார்.

முன்னதாக, கூட்டணி குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோர் கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இன்னும் சில தொகுதிகளில் இழுபறி நீடிப்பதால் இரு கட்சிகளும் இன்று இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் ஜம்மு- காஷ்மீர் சென்றுள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

முதற்கட்டத் தேர்தலில் 24 இடங்களில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 35 தருவதாக தேசிய மாநாட்டுக் கட்சி கூறும் நிலையில், காங்கிரஸ் 37 தொகுதிகளைக் கோருகிறது.

இதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவுகள் தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com