ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜோத்பூர் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாய் திட்டியதால் கோபமடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த இரண்டு நபர்கள், அவரை மருத்துவமனையின் பின்புறமுள்ள மருத்துவக் கழிவுக் கிடங்குப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், காவல்துறையினருக்கு திங்கள்கிழமை மாலைதான் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய் திட்டியதால் 14 வயது சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அவரை நீண்ட நேரம் பெற்றோர்கள் தேடியும் கிடைக்காததால், சூரசாகர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக ஞாயிற்றுக்கிழமை மாலையே புகார் அளித்திருந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் தனியாக இருந்த சிறுமியை மருத்துவக் கழிவு கொட்டும் பகுதிக்கு கூட்டிச் சென்று இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து காயங்களுடன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் திங்கள்கிழமை பிற்பகலில் வெளியே வந்த சிறுமி அளித்த தகவலை தொடர்ந்துதான் பாலியல் வன்கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மருத்துவக் கழிவுகளை கொட்டும் கிடங்கை தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு ஆதாரங்களை கைப்பற்றினர்.
மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவமனையில் துப்புறவு பணி செய்யும் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.