கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர், காவல் ஆணையரின் பெயரில் பதிவிடப்பட்ட இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்த மாத தொடக்கத்தில், முதுநிலை மருத்துவம் பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவரை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், சஞ்சய் ராய் பயன்படுத்தி வந்த இரு சக்கர வாகனம் கொல்கத்தா காவல் ஆணையரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய், காவல் ஆணையரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். சரியான விசாரணைகூட செய்யாமல், தற்கொலை என்று கூறிய அதே ஆணையர்தான். காவல் ஆணையருடன் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு உடனடியாக இருவரும் பதவி விலக வேண்டும். இந்த வழக்கில் உண்மையை வெளிக் கொண்டுவர சிபிஐ காவலில் இருவரையும் எடுத்து விசாரிக்க வேண்டும். இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்வதுடன் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
கொலை செய்யப்பட்ட மருத்துவர், மருத்துவமனையின் நெஞ்சகப் பிரிவில் பணிபுரிந்தவர். அந்த பிரிவில், நல்ல மருந்துகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக தரக்குறைவான போலி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரிக்க வேண்டும்.
கொல்கத்தா காவல்துறையும், மம்தா பானர்ஜியும் அனைத்து ஆதாரங்களையும் அழித்து சம்பந்தப்பட்டவர்களை காக்க அனைத்தையும் செய்திருப்பதால், இதனை கையாள சிபிஐ-க்கு கடினமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் கொல்கத்தா காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில்,
“கொல்கத்தா ஆணையரின் பெயரில் பதிவிடப்பட்ட சஞ்சய் ராயின் பைக்கை காவல்துறைதான் பறிமுதல் செய்து பின்னர் சிபிஐயிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
கொல்கத்தா காவல்துறையின் பல்வேறு துறைகளின் பணிகளுக்காக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் அதிகாரப்பூர்வமாக ஆணையரின் பெயரில் பதிவிடுவதே வழக்கம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய், கொல்கத்தா மருத்துவமனையில் காவல்துறையின் பணிகளுக்காக தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டிருந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்து காவல் நிலையத்துக்கு சம்பந்தமான கோப்புகளை கையாண்டு வந்தார். மேலும், அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்திலும் காவல்துறை என்று எழுதப்பட்டிருக்கும் என்றும் முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த வழக்கு தற்போது சிபிஐ வசமுள்ள நிலையில், சஞ்சய் ராய் மற்றும் கொல்கத்தா மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் உள்பட 7 பேருக்கு உண்மைக் கண்டறியும் சோதனை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.