இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நீக்கப்பட்டுள்ளார்.
முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணையில் சந்தீப் கோஷ் இருப்பதால், அவரை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக இந்திய மருத்துவ சங்க ஒழுங்காற்றுக் குழு அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் கொல்கத்தா பிரிவு கூட்டமைப்பின் துணைத் தலைவராக சந்தீப் கோஷ் இருந்த நிலையில், தற்போது அப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் ஆர்.வி. அசோகனால் அமைக்கப்பட்ட குழுவானது, முதுநிலை மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து இன்று (ஆக. 28) தானாக முன்வந்து பரிசீலித்தது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் அசோகன் உள்பட பொதுச்செயலாளர் அனில் குமார் ஜே. நாயக் உள்ளிட்ட குழுவினர், பாதிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவியின் வீட்டிற்குச் சென்றனர்.
பொறுப்புக்கு ஏற்ற வகையில் சிக்கல்களை கையாளத் தவறியதாக உங்களுக்கு (சந்தீப் கோஷ்) எதிரான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர்.
ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ சங்கத்தின் கொல்கத்தா பிரிவு கூட்டமைப்பு மற்றும் இன்ன பிற மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால், இந்திய மருத்துவ சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து உங்களை (சந்தீப் கோஷ்) நீக்க இந்திய மருத்துவ சங்க தலைமை ஒழுங்காற்று குழு முடிவு செய்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீடு மற்றும் 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.