
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த கட்டுரை:
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பெண்களுக்கு எதிராக இது ஒரு சம்பவம் அல்ல, தொடர் குற்றங்களின் ஒரு பகுதி என்பதே மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் மாணவர்கள், மருத்துவர்கள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களில் மழலையர், பள்ளி சிறுமிகளும் அடங்குவர். மகள்கள், சகோதரிகள் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாவதை எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது. இந்த நாடு சீற்றம் அடைவதால் நானும் ஆத்திரமடைகிறேன்.
கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று, பெண்களின் அதிகாரம் குறித்த எனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டேன். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நான் நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன். நம்முடைய கடந்த கால சாதனைகளுக்கு நன்றி.
இந்தியாவில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான பயணத்திற்கு நான் என்னை ஒரு உதாரணமாக கருதுகிறேன். ஆனால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பற்றி கேள்விப்படும்போது நானே மிகவும் வேதனையும் அடைகிறேன்.
சமீபமாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ரக்ஷா பந்தன் கொண்டாட வந்த பள்ளி மாணவ, மாணவிகள், 'நிர்பயா மாதிரியான ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நடக்காது என்று எங்களுக்கு உறுதியளிக்க முடியுமா?' என்று என்னிடம் கேட்டபோது நான் இக்கட்டான நிலைக்கு ஆளானேன்.
ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டாலும், தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிப்பது அனைவருக்கும், குறிப்பாக சிறுமிகளுக்கு அவசியம் என்றும் அது அவர்களை வலிமையாக்கும் என்றும் கூறினேன்.
ஆனால், பல காரணிகளால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. சமூகம்தான் இந்த கேள்விக்கான முழு பதிலையும் சொல்ல முடியும். அவ்வாறு நடக்கவேண்டுமெனில், முதலில் நேர்மையான, பாரபட்சமற்ற சுயபரிசோதனை தேவை.
சமூகமாகிய நாம், சில கடினமான கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் எங்கே தவறு செய்தோம்? தவறுகளை சரிசெய்ய என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான விடையை நாம் கண்டுபிடிக்காவிட்டால் நம்மில் பாதி பேர் சுதந்திரமாக வாழ முடியாது.
சமத்துவம் என்பது உலகின் பல பகுதிகளில் மிகப்பெரிய லட்சியமாக இருந்தபோது நம் இந்திய அரசமைப்புச் சட்டம் பெண்கள் உள்பட அனைவருக்கும் வழங்கியது. இந்த சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு அரசு நிறுவனங்களை உருவாக்கி, தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்படுத்தி அதை மேம்படுத்தியது.
சமூக அமைப்புகளும் இதற்கு உறுதுணையாக இருந்தன. சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தினர்.
இறுதியாக, சமூகப் புரட்சியினால் பெண்கள் அதிகாரம் பெறுகின்றனர். ஆனால் தடையில்லாமல் இந்த பயணம் இல்லை. பெண்கள் ஒவ்வொரு அங்குல வெற்றிக்கும் போராட வேண்டியுள்ளது.
சமூகத்தில் உள்ள தவறான எண்ணங்கள், சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக இருக்கின்றன. இது மிகவும் கேவலமான மனநிலை. இதனை ஆணாதிக்க மனநிலை என்று கூற மாட்டேன். ஏனெனில் இது பாலினத்துடன் சம்மந்தப்பட்டது அல்ல. அது இல்லாத ஆண்களும் இருக்கின்றனர்.
அந்த மனநிலை உள்ளவர்கள் பெண்ணை குறைந்த ஆற்றல் கொண்டவராக, புத்திசாலித்தனம் குறைவுடையவராக பார்க்கிறார்கள். அப்படியான கருத்துக்களை வெளியே பகிர்ந்துகொள்பவர்கள், ஒருபடி மேலே சென்று பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் ஒரு சிலர், பெண்களை புறக்கணிப்பதுதான். அது அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்த நிலை இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் சிறு வித்தியாசம் இருக்கிறது. அவ்வளவே. பெண்கள் குறித்த சிலரின் இந்த மனநிலையை எதிர்கொள்வது நாடு மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்குமான பணியாகும். இந்த தவறான அணுகுமுறையை மாற்ற பல ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. சட்டங்களும் உள்ளன, சமூகப் பிரசாரங்களும் இருக்கின்றன. ஆனாலும், ஏதோ ஒன்று குறுக்கே வந்து நம்மை வேதனைப்படுத்துகிறது.
2012 டிசம்பரில், ஒரு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். அதுபோன்றதொரு இன்னொரு நிர்பயா சம்பவம் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கான திட்டங்களை வகுத்தோம். இந்த முயற்சிகளால் ஓரளவு மாற்றம் ஏற்பட்டது.
இருப்பினும், எந்தவொரு பெண்ணும் தான் வாழும் அல்லது வேலை செய்யும்இடத்தில் பாதுகாப்பற்றதாக உணரும் வரை பணி முடிவதில்லை. தலைநகரில் நடந்த அந்த சோக நிகழ்வுக்குப் பிறகு ஒரு சில சம்பவங்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றாலும் எண்ணற்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அவை விரைவில் மறக்கப்படவும் செய்கின்றன.
இதன் மூலமாக நாம் பாடம் கற்றுக்கொண்டோமா? மற்றொரு கொடூரமான குற்றம் நடந்தால் மட்டுமே நினைவுகூர்கிறோம் . இந்த 'கூட்டு மறதி', நான் முன்னதாகக் கூறிய அந்த மனநிலையைப் போலவே மிகவும் அருவருப்பானது என்று பயப்படுகிறேன். வரலாறு அடிக்கடி வலியை ஏற்படுத்துகிறது.
இப்போது வரலாற்றை நேருக்கு நேர் எதிர்கொள்வது மட்டுமின்றி நமக்குள் தேடுவதற்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆய்வு செய்வதற்கும் நேரம் வந்துவிட்டது. இந்த மறதி நோயை மேலும் வளரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை நினைவுபடுத்தவும், எதிர்காலத்தில் இன்னும் விழிப்புடன் இருக்க நம்மை தயார்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் நினைவைப் போற்றினால் மட்டுமே இதை செய்ய முடியும்.
இந்த நாட்டின் மகள்கள் அச்சத்தில் இருந்து சுதந்திரம் பெற்று அவர்களின் பாதையில் உள்ள தடைகளை நீக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறெனில், அடுத்த ரக்ஷா பந்தனுக்கு அந்த குழந்தைகளின் கேள்விக்கு நாம் கூட்டாக ஒரு பதில் அளிக்கலாம்.
'போதும் போதும்' என்று கூட்டாகச் சொல்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.