West Bengal CM Mamata Banerjee
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிகோப்புப் படம்

வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் முற்றுகை! மமதா அறிவிப்பு

வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய மமதா முடிவு.
Published on

வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (ஆக. 28) தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒப்புதல் அளிக்காவிட்டால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் குறிப்பிட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சத்ர பரிஷத் நிறுவன நாளையொட்டி அக்கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. ஆர்ஜி கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முதுநிலை பெண் மருத்துவ மாணவியை நினைவுகூரும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொண்டார்.

அப்போது மமதா பானர்ஜி பேசியதாவது,

''ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல் துறையிடமிருந்து சிபிஐ வழக்கைப் பெற்று 16 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை.

தங்கள் உடன் பயின்ற மருத்துவருக்காக சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் தொடக்கத்திலிருந்தே அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறேன். சம்பவம் நடந்து நாள்கள் பல கடந்தும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். எனினும், தயைகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்.

West Bengal CM Mamata Banerjee
மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி.க்களின் கார்கள் மீது தாக்குதல்!

அடுத்தவாரம் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து, வல்லுறவு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை அடுத்த 10 நாள்களுக்குள் தாக்கல் செய்யவுள்ளோம்.

இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்புவோம். அவர் மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால், ஆளுநர் மாளிகைக்கு வெளியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றுவோம். அவர் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com