புகழ்பெற்ற, பிரபலங்கள், ஏதேனும் குற்றத்துக்காக சிறை செல்ல நேர்ந்தால், அங்கு அவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்வது நாட்டில் ஒன்றும் புதிதல்ல.
அண்மையில், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடிகா் தா்ஷன் உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த புகைப்படத்தில், சிறை வளாகத்தில் விசாரணையில் இருந்த ரௌடி வில்சன் நாகா உள்ளிட்டோருடன் தர்ஷன் ஒன்றாக அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது.
அவர்கள் ஏதோ சுற்றுலா வந்தவர்கள் போல ஒன்றாக அமர்ந்து தேநீர் குடிக்கும் புகைப்படம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தில், சிறையின் தலைமைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 9 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சட்டவிதிகள் மீறி நடிகா் தா்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடா்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவரை பெல்லாரி சிறைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், தர்ஷன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பும், இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, ஒரு தளத்தையே தனதாக்கிக் கொண்டு, தனியாக சமையலறை என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். அங்கிருந்த அவர் வெளியே கடைகளுக்குச் சென்று வந்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. சிறையில் பல மணி நேரம் அவரை சந்தித்துப் பேச வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது. இது குறித்து, காவல் அதிகாரி ரூபா, புகைப்பட ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். சசிகலாவுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறுபக்கம் காவல் அதிகாரி ரூபாவும் பணியிட மாற்றங்களை சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது தர்ஷன் வழக்கிலும் இதே பிரச்னை எழுந்திருக்கும் நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு சிறைக் கூடங்கள் எல்லாம் ஒரு தடையே இல்லை என்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
சிறைக் கூடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறை தலைமையகத்தில் இருந்து நேரடியாக காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டே இருக்கும் நடைமுறை என்னவானது என்ற கேள்வியும் எழுகிறது.
சிறைச் சாலையில் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் நடக்கும் என்றால், அதனைத் தடுக்கத்தானே காவல்துறையின் கண்காணிப்புக் கேமராக்கள், தொடர் கண்காணிப்புகள் இருக்கின்றன. அவர்களும் தங்களது பணியை சரியாக செல்வதில்லையா என்றும் மக்கள் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
காவல்துறையை விட இவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கிறார்களோ? என்ற கேள்வி மக்கள் எழுப்பும் நிலையில், இந்த புகைப்படம் வெளியானதால், அது தர்ஷனின் ஜாமீன் மனு மீது எதிரொலிக்குமா என்றும் சந்தேகம் அவர்களது வழக்குரைஞர்கள் தரப்பில் எழுகிறது.
இது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில், தர்ஷனுக்கு எவ்வாறு தேநீர், சிகரெட் கிடைத்தது, அவர் அமர்ந்திருந்த இருக்கை எங்கிருந்து வரவழைக்கப்பட்டது, யார் வரவழைத்துக் கொடுத்தது? என்பது தொடர்பாக விசாரிக்கவும், மற்றொரு வழக்கு, அவர் சிறைச்சாலையில் இருந்துகொண்டு விடியோ கால் செய்யவும் புகைப்படங்கள் எடுக்கவும் பயன்படுத்திய செல்போன் யாருடையது, அது எப்படி அவருக்கு கிடைத்தது என்பது தொடர்பாக விசாரிக்க உள்ளது. சிறைக்குள் செல்ஃபோன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் விடியோ காலில் பேசும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. மூன்றாவது வழக்கு, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்ட அதிகாரிகள் மீதான விசாரணை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைக் கைதிகளுக்கு தேநீரும் காபியும் கிடைக்கும்தான். ஆனால் அவையெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே. இவ்வாறு இருக்கையில் குழுவாக அமர்ந்துகொண்டு சிகரெட் பிடித்தபடி தேநீர் குடிப்பது முற்றிலும் விதிமீறல் என்பது தெளிவாகியிருக்கிறது. அதனால்தான், சிறைத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம், தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள், விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.