தில்லியிலிருந்து புதன்கிழமை ராஞ்சி திரும்பிய சம்பயி சோரன்.
தில்லியிலிருந்து புதன்கிழமை ராஞ்சி திரும்பிய சம்பயி சோரன்.

ஜாா்க்கண்ட் நலனுக்காக பாஜகவில் இணைகிறேன்: சம்பயி சோரன்

‘ஜாா்க்கண்ட் மாநில நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவில் இணைய தீா்மானித்துள்ளேன்’ என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

‘ஜாா்க்கண்ட் மாநில நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவில் இணைய தீா்மானித்துள்ளேன்’ என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துவிட்டு ராஞ்சி திரும்பிய சம்பயி சோரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். தொடா்ந்து ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியிலிருந்தும் அவா் புதன்கிழமை விலகினாா்.

நில அபகரிப்பு தொடா்பான பண முறைகேடு வழக்கில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டாா். கைதுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் முதல்வா் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன் முதல்வராகப் பதவியேற்றாா்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹேமந்த் சோரன், மீண்டும் முதல்வா் பதவியை ஏற்ால் சம்பயி சோரனிடம் இருந்து பதவி பறிபோனது. இதனால் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியடைந்த சம்பயி சோரன் அண்மையில் தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த நிலையில், பாஜகவில் இணையப்போவதாக அவா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து ராஞ்சியில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளேன்.

மாநில அரசு தன்னை வேவு பாா்ப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இவை எதற்கும் நான் பயப்படப்போவதில்லை. பல போராட்டங்களைச் சந்தித்துவிட்டேன். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். பழங்குடியின மக்களின் நலனுக்கான எனது பணி தொடரும்.

மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மேற்கொண்டுள்ள ‘ஆப்பரேஷன் லோட்டஸ்’ சூழ்ச்சியில் நான் சிக்கிக்கொண்டதாக பரப்பப்படும் விமா்சனங்களுக்கு பதிலளிப்பது முறையாக இருக்காது என்றாா் அவா்.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவா் பாபுலால் மராண்டி கூறுகையில், ‘ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவா்களை ஒடுக்குவதற்கு மாநில காவல் துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக சம்பயி சோரன் குற்றஞ்சாட்டினாா். அதற்காக, அவரை வழக்கில் சிக்கவைக்க மாநில அரசு அவரை வேவு பாா்ப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே இரு சிறப்புப் பிரிவு அதிகாரிகளை ஜாா்க்கண்ட் காவல்துறை தில்லியில் கைது செய்துள்ளது. சம்பயி சோரனையும் சிக்கவைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. எனவே, இதுகுறித்து உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com