2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர்.
நாட்டின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.11.6 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும். நாட்டில் ஒட்டுமொத்தமாக 334 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்கிறது இந்த பட்டியல்.
மேலும் அதிர்ச்சி தரும் தகவலையும் இந்த பட்டியல் வெளியிட்டிருக்கிறது. அதுதான், கடந்த ஆண்டில் மட்டும் ஒவ்வொரு ஐந்து நாள்களுக்கும் ஒரு பணக்காரர் நாட்டில் உருவாகியிருக்கிறார் என்பது.
2024ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தரவுகளின்படி, சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில், கௌதம் அதானி (62) மற்றும் அவரது குடும்பத்தினர், நாட்டின் முதல் பணக்காரர் என்ற அடையாளத்தோடு இருந்த வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிவிட்டு, ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி 10.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஹுருன் இந்தியா நிறுவனர் மற்றும் ஆராய்ச்சி தலைவர் அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், ஆசியாவின் சொத்து உருவாக்கும் இஞ்ஜினாக இந்தியா உருவாகி வருகிறது, சீனாவில், பணக்காரர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது, இந்தியாவிலோ 29 சதவீதம் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து 334 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆறு தனிநபர்கள், தொடர்ந்து நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார்கள். அதில், கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, ஷிவ் நாடார், சைரஸ் எஸ். பூனாவாலா,. கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிஷன் தமனி ஆகியோர் அடங்குவர்.
ஸெப்டோ இணை நிறுவனர் கைவால்யா வோஹ்ரா (21), மிகக் குறைந்த வயதில், பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார். இவருடைய இணை நிறுவனர் ஆதித் பலிசா (22) மிக குறைந்த வயதில் பணக்காரர் ஆனவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மிகவும் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில், ஹிந்தி நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். இவரது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் மதிப்பு உயர்ந்ததன் மூலம், இவர் இந்த பட்டியலில் இடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.