
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான இரண்டு ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை ஆர்ஜி கர் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில், பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்த போது பதிவான ஆடியோ என்று இரண்டு ஆடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
முதல் ஆடியோவில், பெண் மருத்துவரின் தந்தையும், மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளரும் பேசுவது பதிவாகியிருக்கிறது. அதில், உதவி கண்காணிப்பாளர், உங்கள் மகளுக்கு உடல்நிலை கடுமையாக பாதித்துள்ளது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார். மற்றொரு ஆடியோவில், உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துவிட்டார், உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதும் பதிவாகியிருக்கிறது.
இரண்டு ஆடியோவிலும், தங்களது மகளைப் பற்றி பெற்றோர் அறிந்துகொள்ள மீண்டும் மீண்டும் மகளுக்கு என்ன ஆனது என்று கேட்கிறார்கள், ஆனால், மருத்துவமனை தரப்பில் மருத்துவர்கள்தான் எதையும் சொல்ல முடியும் என்று ஒவ்வொரு முறையும் கூறப்படுகிறது.
அதாவது, உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்று சொன்ன பெண்ணிடம், ப்ளீஸ் என்ன ஆனது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் தந்தை.
அவருக்கு காய்ச்சலா? அவரது உடல்நிலை எப்படியிருக்கிறது என்று மீண்டும் தந்தை கேட்கிறார். மருத்துவர்கள் உங்களிடம் சொல்வார்கள் என்று பெண் பதிலளிக்கிறார்.
அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என தந்தை மீண்டும் கேட்கும்போது, எதுவும் சொல்ல முடியாது, அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பதில் வருகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் பெற்றோர் வாயடைத்துப் போகிறார்கள்.
இது உண்மையான ஆடியோவா என்பது பெற்றோர்தான் உறுதி செய்ய வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இந்த ஆடியோ ஒத்துப் போகிறது.
மேலும், அந்த ஆடியோவில் இருக்கும் குரலானது, மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளராக இருக்கும் அனிதா தாராவின் குரல் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நெஞ்சகப் பிரிவு முன்னாள் தலைவர், தொலைபேசி அழைப்பை மேற்கொண்டது துணை கண்காணிப்பாளர் துவைபயன் விஸ்வாஸ் என்று காவல்துறையிடம் கூறியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.