இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் தற்கொலை விகிதமானது, மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மாணவர்களின் தற்கொலைகள்: இந்தியாவின் பரவும் தொற்றுநோய்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை புதன்கிழமை மாநாடு ஒன்றில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வு அறிக்கையில், நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவிகிதம் அதிகரிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் கடந்தாண்டைவிட 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, தற்கொலை செய்து கொண்ட மொத்த மாணவர்களின் 53 சதவிகிதம் பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகளின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள்தொகையில் 24 வயதுக்கு குறைவானவர்கள் 58.2 கோடி பேர் இருந்த நிலையில், தற்போது, 58.1 கோடி பேர்தான் உள்ளனர். தற்கொலை எண்ணிக்கை 6,654இல் இருந்து 13,044ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வில், மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசங்களில் அதிகளவிலான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மொத்த எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்கு இந்த மாநிலங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் 29 சதவிகிதம் பேர் தென் மாநிலங்களை சார்ந்தவர்கள்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவிதமும், மாணவிகளின் எண்ணிக்கை 61 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].