நடப்பு நிதியாண்டின் ஜூலை வரையிலான நிதி செயல்திறன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் வரையிலான மாதாந்திர கணக்குகளின் நிதி செயல்திறன் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கையானது, நாட்டின் நிதிகளை நிர்வகிப்பதிலும், வருவாய் உருவாக்கம், தேவையான செலவினங்களுக்கு இடையில் சமநிலைப்படுத்துவதிலும், மாநில அரசுகளுக்கு வளங்களின் ஓட்டத்தை பராமரிப்பதிலும் அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.
நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, பெறப்பட்ட தொகை 31.9 சதவிகிதமாக உள்ளது. நடப்பாண்டு ஜூலை இறுதிக்குள், பல்வேறான வரி மூலமாகவும், வரி அல்லாத வருவாய் மூலமும் மத்திய அரசு மொத்தம் 10,23,406 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
வரிகளின் மூலம் 7,15,224 கோடி வருவாயும், வரி அல்லாதவை மூலம் 3,01,796 கோடி வருவாயும், 6,386 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயும் பெறப்பட்டுள்ளன.
வசூலிக்கப்பட்ட வரி வருவாயில் கணிசமான பகுதியை, மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில அரசுகளின் பங்காக 3,66,630 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த பகிர்ந்தளிப்பை, முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 57,109 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் செலவினங்களைப் பொறுத்தவரையில், நடப்பாண்டின் ஜூலை வரையில், மொத்தம் 13,00,351 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. இது, இந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் 27 சதவிகிதமாகும்.
இதில், 10,39,091 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 2,61,260 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும் செலவிடப்பட்டுள்ளது.
இதில், அரசின் செலவினங்களில் கணிசமான பகுதியான வருவாய் செலவினங்களில், வட்டி செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 3,27,887 கோடி ரூபாயும் அடங்கும்.
அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், சமூகத்தில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மானியங்கள் மூலம் நிவாரணம் வழங்குவதற்கும், அரசின் முயற்சியை எடுத்துரைக்கும் வகையில், முக்கிய மானியங்களுக்காக 1,25,639 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.