
கங்கனா ரணாவத் இயக்கி, நடித்துள்ள எமர்ஜென்சி படத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார்.
கங்கனா, தனது எக்ஸ் பக்கத்தில் "எங்கள் படமான எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இது உண்மையல்ல. உண்மையில், எங்கள் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது, ஆனால் பல அச்சுறுத்தல்கள் வந்ததால்தான் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் காட்ட வேண்டாம் என்றும், பிந்த்ரன்வாலேவைக் காட்ட வேண்டாம் என்றும், பஞ்சாப் கலவரத்தைக் காட்ட வேண்டாம் என்றும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அப்படி செய்தால் படத்தில் காட்ட என்ன எஞ்சியிருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாட்டின் நிலைமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்" என்று கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு எமர்ஜென்சி படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படமானது செப்டம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர், அகால் தக்த் மற்றும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு உள்ளிட்ட சீக்கிய அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்வினையைத் தூண்டியது.
இந்த நிலையில், படத்தில் சீக்கியர்களை சித்திரிப்பது குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, படத்தின் வெளியீட்டை நிறுத்துமாறு சிபிஎஃப்சிக்கு ஷிரோமணி அகாலி தளத்தின் தில்லி பிரிவு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியது.
படத்தைத் தடை செய்யக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஷிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரெய்லரில் சீக்கியர்களுக்கு எதிரான காட்சிகள், தங்கள் சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக புண்படுத்தியுள்ளதாக, அவர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சீக்கிய சமூகத்தின் தன்மை மற்றும் வரலாற்றை தவறாக சித்திரித்ததாகக் கூறி, படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும், படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்களில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாபின் சில பகுதிகளில் போராட்டங்களும் எழுந்தன.
ஷிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் செயலாளர் பிரதாப் சிங் கூறியதாவது, ``எமர்ஜென்சி டிரெய்லரில் சீக்கியர்களுக்கு எதிரான காட்சிகள் சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக புண்படுத்தியுள்ளன. சீக்கியர்களை பயங்கரவாதிகளாகவும் பிரிவினைவாதிகளாகவும் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த படம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சீக்கிய சமூகத்தை அவதூறு செய்யக்கூடாது. ஷிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே, படம் வெளியிடப்பட வேண்டும் என்று ஷிரோமணி அகாலி தளத் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் வலியுறுத்தியுள்ளார்.
எமர்ஜென்சி படத்தின் கதையை கங்கனாவே எழுதியுள்ளார்; திரைக்கதையை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இதில் அனுபம் கெர், ஸ்ரேயாஸ் தல்படே, மஹிமா சவுத்ரி மற்றும் மறைந்த சதீஷ் கௌசிக் ஆகியோரும் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.