
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் 18 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிபிஐ தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில், சந்தீப் கோஷ் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கோஷ் கூறியிருப்பதாக வெளியான தகவலில், தனக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் மருத்துவர் கொலை நடந்த அன்று, நெஞ்சக நோய் பிரிவு உதவிப் பேராசிரியர் சுமித் ராய் தபடர் காலை 10 மணிக்கு போன் செய்துள்ளார். ஆனால், தான் குளித்துக்கொண்டிருந்ததால் அந்த போனை எடுக்கவில்லை. பிறகு, 10.20 மணிக்கு தான் மீண்டும் அவரை போனில் அழைத்த போதுதான், பெண் மருத்துவர் கொலை பற்றி தெரியவந்தது என்று கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தான் மருத்துவமனைக்கு விரைந்து சென்றதாகவும், செல்லும் வழியிலேயே தாலா காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால், அதற்கு முன்பே, காவல்நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் சென்றிருக்கிறது என்றும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைக்கு 11 மணிக்குச் சென்றதாகவும், அதற்குள் சம்பவ இடத்துக்குள் யாரும் செல்லாத வகையில் மருத்துவமனையில் இருந்தவர்களைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் விசாரணை நடைத்தி வரும் அதிகாரிகளுக்கு, சம்பவ இடத்தில், மருத்துவமனைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத பலர் இருந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. பெண்ணின் பெற்றோருக்கு மிகவும் தாமதமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும், அதுவும், பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருப்பதும், அவ்வாறு கூறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியது யார் என்பதும் சந்தேக வளையத்தை மருத்துவமனையைச் சுற்றிலும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதேவேளையில், மருத்துவமனைக்கு காவல்துறையினர் வந்தபோது, சந்தீப் கோஷ் அங்கு ஏன் இருக்கவில்லை, காவல்துறையினர், மருத்துவமனை நிர்வாகத்துடன்தான் பேசியிருக்கிறார்கள், அது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விடைகாண, சந்தீப் கோஷிடம் மேலும் சில உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில், கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட கசியவிடவில்லை, ஆனால், சிபிஐ, மருத்துவமனையில் பாதுகாவலர்களிடம் கூட விசாரணையை நடத்தியிருக்கிறது. அவர்களில் இரண்டு பேரிடம், உண்மைக் கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.