மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கொலை நடந்த இடத்தில், பெண்ணின் உடல் இருந்தபோது அங்கே பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதனால், புகைப்படம் குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் மேற்கு வங்க மாநில கிளை, கொல்கத்தா காவல்துறையின் நடவடிக்கை குறித்து கண்டனம் வெளியிட்டிருக்கிறது.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர், ஆகஸ்ட் 9ஆம் தேதி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை செய்யப்பட்ட மருத்துவர் இருந்த கருத்தரங்கு அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.
இதனைப் பார்க்கும் பலரும், ஒரு குற்றம் நடந்த இடத்துக்குள் எத்தனை பேரை அனுமதிப்பது? இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், குற்றச் சம்பவம் மாற்றியமைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுவாகவே எழுகிறது என்று கருத்திட்டிருக்கிறார்கள்.
புகைப்படம் குறித்து கொல்கத்தா காவல்துறை அளித்த விளக்கத்தில், ஒரு சில ஊடகங்களில் வெளியானது போல, வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறி, மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் என அனைவரைப் பற்றியும் தனித்தனியாக காவல்துறை அதிகாரி புகைப்படத்தைக் காட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால், விசாரணையின்போது, தடயவியல் நிபுணர் என்று கொல்கத்தா காவல்துறை சொன்ன அந்த நபர், மருத்துவர் ஆவிக் டே என்பதும், அவர் அறுவைசிகிச்சைத் துறையில் முதுகலை படிக்கும் முதலாமாண்டு மாணவர் என்றும் மருத்துவர்கள் சங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஐஎம்ஏவின் மேற்கு வங்க கிளையின் சமூக வலைதளத்தில், மேலும் கூறுகையில், ஆவிக் டே, முதுகலை படிப்பில் சேர்க்கப்பட்டதிலேயே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவர் பயிற்சி செய்தது வேறு மருத்துவமனையில், ஆனால் பயிற்சி செய்ததாக வேறு மருத்துவமனை சான்றிதழ் கொடுத்ததன் பேரில் சேர்க்கை பெற்றுள்ளார். அவரது சான்றிதழ்கள் அனைத்தும் சோதனைக்கு உள்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சிறிதும் தொடர்பில்லாத ஆவிக் டே, கொலை நடந்த கருத்தரங்கு அறையில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
சம்பவம் குறித்து, மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தபோதும், அங்கு ஆவிக் டே இருந்துள்ளார் என்றும் இந்திய மருத்துவக் கழக கிளை தெரிவித்துள்ளது.