
பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்தார்.
வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 101 போ் தில்லியை நோக்கி பேரணியாக சென்றபோது அவா்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். இதில் விவசாயிகள் சிலர் காயமடைந்ததால், பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச. 8) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியாகச் சென்றனர்.
இதையும் படிக்க | விவசாயிகள் மீது காவல்துறை பூ மழை! போராட்டத்தில் சுவாரசியம்!
அப்போது ஷம்பு பகுதியில் காவல் துறையினர் கம்பி வேலிகளை அமைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளின் பேரணியைத் தடுத்தனர்.
இதில் 9 விவசாயிகள் காயமடைந்தனர். ஒருவர் மிகுந்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிகார் மாநிலம் கயாவில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி பேசியதாவது,
''விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் தேவையில்லை. விவசாய சங்க பிரதிநிதிகள் 5 பேர் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது.
இதுபோன்ற சூழலில் விவசாயிகளின் போராட்டம் அரசியலாக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நலன் குறித்து மிகுந்த கவனத்துடன் உள்ளார். இதனால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.