கோப்புப் படம்
கோப்புப் படம்

இளைஞர்களை ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்திய நபர்: 2,500 கி.மீ. விரட்டிப்பிடித்த காவல்துறை!

இந்திய இளைஞர்களை ஆன்லைன் மோசடி குற்றங்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபடுத்திய நிறுவனத்தைச் சேர்ந்த நபர் கைது.
Published on

இந்திய இளைஞர்களை சட்டவிரோதமாக ஆன்லைன் மோசடி குற்றங்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபடுத்திய நிறுவனத்தைச் சேர்ந்த நபரை தில்லி காவல்துறையின் சிறப்புப் படைக் கைது செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 2,500 கிலோமீட்டர்கள் இடைவிடாமல் அவரைத் துரத்திப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தில்லியின் நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் கடந்த மே 27 அன்று நரேஷ் லகாவத் என்பவர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் வேலை தேடிக் கொண்டிருந்த போது தில்லியைச் சேர்ந்த அலி இண்டர்நேஷனல் சர்வீஸ் எனும் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் குறித்து தெரிந்துகொண்டேன்.

அந்த நிறுவனம் எனக்கு தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளில் வேலை வழங்கியது. பின்னர், என்னை தாய்லந்துக்கு அனுப்பினர். ஆனால், நான் தாய்லாந்து சென்றவுடன் எனது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டனர். அங்கு இந்தியர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் சீன நிறுவனம் ஒன்றில் என்னைப் பணிபுரியுமாறு வற்புறுத்தினர்” என்று குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உடனடியாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மஞ்சூர் ஆலம், ஷாஹில், ஆஷிஷ், பவன் யாதவ் மற்றும் ஹைதர் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் வேலை தேடும் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து லாவோஸ் நாட்டில் உள்ள ’தங்க முக்கோணப் பகுதி’ என்ற பகுதியில் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய குடிமக்களை ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றுவதற்கு பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவ்வாறு பணியிலமர்த்தப்படும் இளைஞர்களை அலி இண்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனம் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

”இந்த குற்றத்தில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளி கம்ரான் ஹைதர். தலைமறைவாக இருந்த கம்ரான் ஹைதர் பலமுறை முயற்சி செய்தும் கைதில் இருந்து தப்பித்து வந்தார். மேலும், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். தொடர்ந்து, தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்த ஹைதர் வெவ்வேறு மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றுகொண்டே இருந்தார்.

அவரைப் பிடிக்க மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தோம்.

இந்த நிலையில், கம்ரான் ஹைதி ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இரு சிறப்புப் படைகளை அனுப்பி நேற்று (டிச. 7) நம்பல்லி ரயில் நிலையத்திற்கு அருகே அவரைக் கைது செய்தோம். எங்கள் குழு ஓய்வின்றி கிட்டத்தட்ட 2,500 கிலோ மீட்டர்கள் துரத்திச் சென்று அவரைப் பிடித்தோம்” என காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com