மணிப்பூரில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்(அஃப்ஸ்பா) மீண்டும் அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
மணிப்பூரில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!
PTI
Published on
Updated on
1 min read

இம்பால்: வன்முறைச் சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்(அஃப்ஸ்பா) மீண்டும் அமல்படுத்தப்படுவதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஜிரிபாம் மாவட்டம் உள்பட பதற்றமான சூழல் நிலவும் 6 பகுதிகளில் ‘அஃப்ஸ்பா’ சட்டத்தை அண்மையில் அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இச்சட்டத்தின்கீழ், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எந்தவொரு இடத்திலும் தேடுதல் பணியில் ஈடுபடவும், சந்தேகத்தின்பேரில் எந்தவொரு தனி நபரையும் கைது செய்யவும், பொது அமைதி சீர்குலையும்போது தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், அஃப்ஸ்பா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(டிச. 10) இம்பாலில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த மாதம் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்திலும் இந்த போராட்டம் அமைந்தது.

இம்பால் மேற்கு மாவட்டத்திலுள்ள தாவ் திடல் பகுதியில் தொடங்கிய பேரணி 5 கி.மீ. தொலைவிலுள்ள குமான் லாம்பாக் திடலில் நிறைவடைந்தது. ‘மணிப்பூரை தவிர்க்காதீர்’, ‘மணிப்பூரை பாதுகாக்கவும்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கையில் ஏந்தியிருந்ததைக் காண முடிந்தது.

மனித உரிமைகள் நாள் அனுசரிக்கப்படுவதைக் குறிக்கும் பொருட்டு, இன்று(டிச. 10) இந்த மாபெரும் பேரணி ‘அனைத்து மணிப்பூர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைப்பு’, ’அனைத்து மணிப்பூர் பெண்கள் தன்னார்வலர்கள் சங்கம்’, ’மனித உரிமைகள் குழு’, ’மணிப்பூர் மாணாக்கர் சம்மேளனம்’ உள்ளிட்ட பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com