
விஎச்பி மாநாட்டில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்ற விவகாரம் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பல சந்தர்ப்பங்களில் தடைசெய்யப்பட்ட விஎச்பி-யின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நீதிபதியின் முன் சிறுபான்மை கட்சி எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? என்று கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னதாக நீதிபதி யாதவ் கூட்டத்தில் பேசுகையில், 'இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது' என்று கூறியுள்ளார்.
மேலும் பசுக்களை பாதுகாப்பது இந்து சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும் பேசினார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் அமைப்பான 'நீதித்துறை பொறுப்புடைமை மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரசாரம்'(சிஜேஏஆர்) அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளராக பிரஷாந்த் பூஷண், இந்த புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் வகுப்புவாத கருத்துகளைக் கூறி நடத்தை விதிகளை மீறியதற்காக, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் கோரியுள்ளார்.
கூட்டத்தில் அவர் பேசியது அரசியலமைப்பு விதிகளான 14, 21, 25, 26 ஆகியவற்றையும் அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மையின் அடிப்படை கொள்கைகளை மீறியதாகவும் கடிதத்தில் வலியறுத்தியுள்ளார்.
முன்னதாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.