
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை புதன்கிழமை சந்தித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தனக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்; அவை சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
மக்களவையில் கடந்த வியாழக்கிழமை (டிச.5) பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ‘திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் குற்றப் புலனாய்வு ஊடக தளம் (ஓசிசிஆா்பி) வெளியிடும் அறிக்கைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த ஊடக தளத்துக்கும் அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளா் ஜாா்ஜ் சோரஸுக்கும் தொடா்பு உள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சாத்தியமாகிவரும் இந்தியாவின் வெற்றிப் பயணத்தை சீா்குலைக்க அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளரும் ‘ஓசிசிஆா்பி’ தளமும் காங்கிரஸும் கூட்டாக முயற்சிக்கின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா். மேலும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சில கேள்விகளையும் எழுப்பினாா். இதையடுத்து, ஜாா்ஜ் சோரஸுக்கும் ராகுல் மற்றும் காங்கிரஸுக்கும் தொடா்புள்ளதாக, அவையில் பாஜக எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா்.
இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதால், அவை அலுவல்கள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை புதன்கிழமை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
அதானி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக என் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பாஜக கூறுகிறது. ஆனால், நான் ஆவேசமடையப் போவதில்லை. மக்களவையில் டிச.13-ஆம் தேதிமுதல் 2 நாள்களுக்கு அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதம் நடைபெற வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது.
எனவே, மக்களவைத் தலைவரை சந்தித்து, எனக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளை நீக்குமாறு கோரினேன். அக்கருத்துகளை ஆய்வு செய்வதாக, மக்களவைத் தலைவா் தெரிவித்துள்ளாா். அனைத்து விதமான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் பாஜக தொடா்ந்து கூறுகிறது. ஆனால், அவை சுமுகமாக நடைபெற வேண்டுமென்பதே காங்கிரஸின் விருப்பம்.
இதையும் படிக்க | வங்கிகளிடம் ரூ. 25,500 கோடி கடன் கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்?
எங்களைத் தூண்டும் வகையில் பாஜக என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவையின் சுமுக செயல்பாட்டுக்கு நாங்கள் முயற்சிப்போம், அரசமைப்புச் சட்டம் மீதான விவாதம் நடைபெற வேண்டும் என்றாா் ராகுல்.
அரசமைப்புச் சட்டம் தொடா்பாக மக்களவையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளிலும், மாநிலங்களவையில் 16, 17 ஆகிய தேதிகளிலும் விவாதம் நடைபெறுமென கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்
ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த அவதூறு கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரும் மனுவை விரைந்து ஆய்வு செய்ய வலியுறுத்தி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கடிதம் எழுதியுள்ளாா். மேலும், மக்களவை அலுவல்களில் பங்கேற்க காங்கிரஸ் ஆா்வத்துடன் உள்ளது என்றும் தனது கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதையும் படிக்க | கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.