
கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள், தங்களின் பெயர்களுடன் பிராமண குடிப்பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜான்பூர் மாவட்டத்தில் இருந்து 35 - 40 கி.மீ. தொலைவில் கெரகாட் தாலுகாவில் டெஹ்ரி என்ற கிராமம் உள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த கிராமத்தில் 7,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 5,000 ஹிந்துக்களும் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெஹ்ரியை சேர்ந்த 70 முஸ்லிம்கள் திடீரென்று தங்களின் பெயர்களுடன் பிராமண குடும்பப் பெயர்களைச் சேர்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், அவர்கள் தாங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்கு மாறவில்லை என்றும் தங்களின் வம்சாவளிகளைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகே பெயரை மாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த நெளஷாத் அகமது என்பவர் தனது மகளின் திருமண பத்திரிகையில், தனது பெயரை நெளஷாத் அகமது ’துபே’ என்று குறிப்பிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதே கிராமத்தில் நெளஷாத் அகமது வீட்டுக்கு அருகிலுள்ள ஜி இர்ஷாத் அகமது பாண்டே என்பவர் வசிக்கிறார். இதே போன்று, பலரும் தங்களின் பெயர்களுடன் மிஸ்ரா, பாண்டே, திவாரி என்ற பிராமண குடும்பப் பெயர்களைச் சேர்த்து வருகின்றனர்.
பெயர் மாற்றம் குறித்து நெளஷாத் அகமது துபே கூறியதாவது:
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் பூர்வீகத்தைப் பற்றி அறிந்தபோது இந்த நடைமுறையைத் தொடங்கினோம். பல தலைமுறைக்கு முன்பு மதம் மாறிய ஹிந்துகள் என்பதை அறிந்தோம்.
8 தலைமுறைக்கு முன்னதாக எனது முன்னோர் லால் பகதூர் துபே முஸ்லிம் மதத்துக்கு மாறினார். எனது குடும்பத்தின் முன்னோர்களை பண்டித் என்று மக்கள் அழைத்தது, எனது முன்னோர்கள் பற்றி நான் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.
எங்களின் முன்னோர் லால் பகதூர் துபே, டெஹ்ரிக்கு வந்த பிறகு முஸ்லிமாக மதம் மாறியதாக எனது தாத்தா என்னிடம் கூறினார். இந்த தகவல்களைப் பெற்ற பிறகு, உண்மையான எனது குடும்பப் பெயரான துபேவை வைக்க விரும்பினேன். இருப்பினும், எனது குடும்பத்தில் வேறு யாரும் துபே என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை” என்றார்.
இதேபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த எஹ்தேஷாம் அகமது, தானும் ஹிந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றார். தனது மூதாதையர்கள் பிராமணர்கள் என்றும், இருப்பினும், இன்னும் தனது பெயருடன் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை என்றார்.
டெஹ்ரி கிராமத் தலைவர் ஃபர்ஹான் கூறுகையில், தனது முன்னோர்கள் 4 தலைமுறைக்கு முன்பு முஸ்லிம் மதத்துக்கு மாறியதாக தெரிவித்தார்.
இதே கிராமத்தில், அப்துல்லா ஷேக் தற்போது அப்துல்லா ஷேக் துபே என்றும், முகமது குஃப்ரான் தற்போது தாகூர் குஃப்ரான் என்றும் சயாத் சாண்டில்யாவாகவும் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தொடர்ந்து முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிறார்கள், கோயிலுக்குச் சென்று ஹிந்து தெய்வங்களையும் வணங்கி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.