வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு வழக்குகளுக்கு தடை: உச்சநீதிமன்றம்

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
வழிபாட்டுத் தலங்கள்
வழிபாட்டுத் தலங்கள்
Published on
Updated on
1 min read

புது தில்லி: மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு செய்வது தொடர்பாக கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக மசூதிகள் மற்றும் தா்காக்களில் ஆய்வு நடத்துவது தொடா்பான வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் எந்தவொரு உத்தரவையும் அடுத்த அறிவுறுத்தல் வெளியிடப்படும் வரை பிறப்பிக்கக் கூடாது என்றும் இதுதொடா்பாக புதிதாக வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஜாமா மசூதி ஆகியவை தொன்மையான ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று ஹிந்துக்கள் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் - 1991 சட்டத்தை மேற்கோள்காட்டி, இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று முஸ்லிம் தரப்பு வாதிடுகிறது. ஏனெனில், நாடு சுதந்திரமடைந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நிலவிய வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையின் மாற்றத்தை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது. மேலும், மதத் தன்மையைப் பராமரிப்பதற்கான உரிமைகளை வழங்குகிறது.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் 2, 3 மற்றும் 4 பிரிவுகளை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு, பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு உள்பட 6 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

1991-வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லத்தக்க தன்மையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பிற நீதிமன்றங்கள் இந்த விவகாரம் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் மசூதியில் ஆய்வுக்கான இடைக்கால உத்தரவு அல்லது இறுதி உத்தரவு உள்பட எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மத்திய அரசு சமா்ப்பிக்கும் பதில் மனு மீது கருத்தைப் பதிவு செய்ய எதிா் மனுதாரா்களுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.