'நடிகர் குடும்பத்துடன் மோடி, பாதிக்கப்பட்டோருடன் ராகுல்!'

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது பற்றி காங்கிரஸ் விமர்சனம்.
'நடிகர் குடும்பத்துடன் மோடி,  பாதிக்கப்பட்டோருடன் ராகுல்!'
Published on
Updated on
2 min read

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி - கபூர் குடும்பத்தினர் சந்திப்பு!

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர்.

கரீனா கபூர், சயீஃப் அலி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரிஷ்மா கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, ஆதர் ஜெயின், அர்மான் ஜெயின், நீது கபூர் உள்ளிட்டோர் பிரதமர் மோடியைச் சந்தித்து டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.

அதாவது ராஜ்கபூரின் நூற்றாண்டு விழா  டிசம்பர் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொள்ள அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்முதலில் ராஜ்கபூர் நடித்த திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதுடன் ராஜ்கபூரின் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி - சம்பலில் பாதிக்கப்பட்டவர்கள் சந்திப்பு

இதேநாளில் அதாவது டிசம்பர் 10 ஆம் தேதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சம்பலில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவர்களின் நீதியை உறுதிசெய்ய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், 'சம்பலில் நடந்த சம்பவம் பாஜகவின் வெறுப்பு அரசியலின் தீய விளைவுகள். இது அமைதியான சமூகத்திற்கு ஆபத்தானது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த வன்முறை மற்றும் வெறுப்பு மனநிலையை அன்புடனும் சகோதரத்துவத்துடனும் தோற்கடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக நிற்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவோம்' எனப் பதிவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் சம்பலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்க சென்றபோது காஸிபூர் எல்லையில் உத்தர பிரதேச காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது.

ராகுல் காந்தி தனியாகச் செல்ல தயாராக இருப்பதாகக் கூறியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது அரசமைப்பு உரிமைக்கு எதிரானது என்று ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த நவ. 19 ஆம் தேதி மசூதி கள ஆய்வு செய்யப்பட்டபோது ஏராளமான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட மக்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் எதிர்ப்பு

ஒரேநாளில் நடந்த இந்த இரு நிகழ்வுகளையும் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

'மணிப்பூர் செல்வதற்கோ நாடாளுமன்றம் செல்வதற்கோ பிரதமர் மோடிக்கு நேரமில்லை, மாறாக சினிமா பிரபலங்களுடன் உரையாட நேரமிருக்கிறது' என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கௌரவ் பந்தி, இரு நிகழ்வுகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து, 'முரண்பாடான முன்னுரிமைகள்! பிரதமர் மோடி, பணக்காரர்களுடன் பழகுவதுபோல் ஏழைகளுடன் பழகுவதை பார்க்கவே முடிவதில்லை' என்று பதிவிட்டுள்ளார்.

மறுபுறம் பாஜகவினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியுடனான கபூர் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் விடியோவைப் பகிர்ந்து 'இது பிடித்திருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இன்று, 'நாங்கள் மணிப்பூர் என்று சொன்னோம், அவர்(மோடி) கரீனா கபூர் என்று நினைத்துவிட்டார்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சம்பல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, 2020ல் ஹத்ராஸ் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்திக்கிறார்.

கடந்த வாரம் சம்பல் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அதே உத்தர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் செல்கிறார் என்ற காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com