
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை சிவசேனை (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே பேசியுள்ளது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்தது. இந்த முறை பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், மகா விகாஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் நாக்பூரில் தேவேந்திர ஃபட்னவீஸை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை பேசியுள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே தெரிவித்ததாவது:
“மகாராஷ்டிரத்தில் அமைதியான அரசியலை எதிர்பார்க்கிறேன். தேர்தலில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் நலனுக்கான முடிவுகளை எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று மக்கள் மூலம் அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்போம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.