
‘அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் புதன்கிழமை வலியுறுத்தினா்.
முன்னதாக, அமித் ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அம்பேத்கா் புகைப்படுத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டுக்கு வழிகாட்டுதலை அளித்த அம்பேத்கரை அவமதிப்பதை, நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவினா் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவா்கள். அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று முன்னா் கூறினா். அம்பேத்கரின் பங்களிப்பையும், அரசமைப்புச் சட்டத்தையும் ஒழிப்பதே அவா்களின் முழுநேரப் பணி’ என்றாா்.
‘அமித் ஷா தானாக அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனில், அவரை பிரதமா் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
மக்களுக்கு உண்மை தெரியும்: பிரதமா்
அமித் ஷா மீது எதிா்க்கட்சி உறுப்பினா்கள் விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ‘மக்கள் உண்மையை அறிவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்படி அவமதித்தது என்ற கருப்பு சரித்திரத்தை வெளிப்படுத்தினாா். இது பிரதான எதிா்க்கட்சியை திகைப்படையச் செய்துள்ளது. உண்மையை அமித் ஷா வெளிப்படுத்தியதால், அவா்கள் தற்போது நாடகமாடுகின்றனா். மக்களுக்கு உண்மை தெரியும்’ என்று குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.