ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர்

எம்பிக்கள் காயமடைந்த விவகாரத்தில் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி..
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி..PTI
Updated on
1 min read

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.

எம்பிக்கள் நுழையும் பிரதான வாயிலான மகர் திவார் பகுதியில் எதிர்க்கட்சி எம்பிக்களை மறித்து பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

அதேபோல், பாஜக எம்பிக்கள் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு பிரதான வாயிலாக மகர் திவார் உள்ளது. இந்த பகுதியில் கூட்டத்தொடர் முழுவதும் காங்கிரஸ் எம்பிக்கள் பதாகைகளுடன் வழிமறித்து போராட்டம் நடத்தினர். இன்று முதல்முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள், 1951 முதல் அம்பேத்கரை அவமதிக்கும் காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய எம்பிக்களை ராகுல் காந்தி தலைமையிலான எம்பிக்கள் தாக்கினர். அவர் தள்ளியதில் இரண்டு எம்பிக்கள் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.

உங்களைப் போன்று மற்ற எம்பிக்களும் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டால், என்ன நடக்கும்? நாங்கள் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்டுள்ளோம். மற்ற எம்பிக்களுக்கு எதிராக உடல் பலத்தை காட்டும் அங்கீகாரத்தை ராகுலுக்கு யார் கொடுத்தது? இதனால் மற்ற எம்பிக்கள் பலவீனமானவர்கள் அல்ல. அகிம்சையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை வைப்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள். ராகுலின் செயல் கண்டிக்கத்தக்கது.

ராகுலின் கோபம், விரக்தி மற்றும் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலுக்காக நாட்டு மக்களிடமும், காயமடைந்த எம்பிக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எம்பிக்களின் காயத்தின் தன்மை குறித்து தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும். சிறிது ரத்தம் கசிந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com