மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று புறக்கணித்தனர்.
LS Speaker Om Birla
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Published on
Updated on
1 min read

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தநிலையில், மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

கடந்த நவ. 25 ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியநிலையில் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தினர். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, நாடாளுமன்ற அவை மற்றும் வளாகத்தில் எம்.பி.க்கள் போராடுவதற்கு கண்டனம் தெரிவித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்தபிறகு எம்.பி.க்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளிப்பார்.

இன்றும் கூட்டத்தொடர் முடிந்தபிறகு தேநீர் விருந்துக்காக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.

அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்போது இதுபோன்ற தேநீர் விருந்தில் கலந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் எங்களுக்கு அவையில் பேச வாய்ப்புகூட வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com