
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவரை நில விவகாரத்தில் கிராமவாசிக்கு சொந்தமான நிலம் ஒன்றை தன்னிடம் குறைந்த விலைக்கு விற்குமாறு வற்புறுத்திய பில்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் சக்யா அவரது ஆட்களுடன் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
அவர் நிலத்தை விற்பதற்கு மறுப்பு தெரிவிக்கவே அந்த நபர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டியுள்ளனர். அடிக்கடி அவரது குடும்பத்தினரை மிரட்டி அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர்.
மேலும், எம்எல்ஏ மற்றும் அவரது ஆட்கள் கிராமவாசியின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தனர். தொடந்து, கடந்த செப். 17 அன்று அந்த நபரின் மனைவியை எம்எல்ஏ அலுவலகத்திற்கு கடத்திச் சென்று எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தக் கொடுமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த நபர் எம்எல்ஏ ஹரிஷ் சக்யா, அவரது சகோதரர், மருமகன் மற்றும் சில தொழிலதிபர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது காவல்துறையில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லீலு சௌதரி இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய டிச. 11 அன்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 பேர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் சிங் விசாரணையை நடத்துவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக எம்எல்ஏ தரப்பில் எந்தக் விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.