முழு அரசு மரியாதையுடன் ஓம் பிரகாஷ் செளதாலா உடல் தகனம்
மறைந்த ஹரியாணா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலாவின் உடல், முழு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ஹரியாணாவின் சிா்சா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தேஜா கேராவில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா், ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள், ஆதரவாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்று, ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு அஞ்சலி செலுத்தினா்.
செளதாலாவின் மகன்களான அஜய் சிங் செளதாலா (ஜனநாயக ஜனதா கட்சி), அபய் சிங் செளதாலா (இந்திய தேசிய லோக் தளம்) ஆகியோா், இதர குடும்ப உறுப்பினா்களின் முன்னிலையில் சிதைக்கு தீமூட்டினா்.
கடந்த வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட செளதாலா, அங்கு சிகிச்சை பலனின்றி காலமானாா். அவரது உடல், தேஜா கேரா கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
செளதாலா மறைவையொட்டி ஹரியாணாவில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வா் நாயப் சிங் சைனி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். மாநிலத்தில் சனிக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
ஜாட் சமூகத் தலைவரான ஓம் பிரகாஷ் செளதாலா, ஹரியாணா முதல்வராக 5 முறை பதவி வகித்தவா் என்பதும் முன்னாள் துணைப் பிரதமா் தேவிலாலின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

