
ஒடிசாவில் மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி பழங்குடியினப் பெண்கள் இருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள காரிமுக்ரா கிராமத்தில் கடந்த வியாழனன்று (டிச. 26) இரு பழங்குடியினப் பெண்கள் கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வந்த செய்தி கிராமத்திற்குள் பரவியதும் அங்குள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்களை மரத்தில் கட்டி வைத்தனர்.
அந்தப் பெண்களின் முகத்தில் கொடூரமாகத் தாக்கிய கும்பல் அவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்புமாறு கூறினர். இந்தத் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் அங்கு விரைந்து அந்தப் பெண்களை மீட்டனர்.
இரு பெண்களையும் காவல்துரையினர் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் மதமாற்றப் பிரசாரம் செய்ய வந்ததாக ஒப்புக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களாலும் இரு வேறு வழக்குகள் அன்று பதிவு செய்யப்பட்டன. புகாரின்படி, ஒடிசாவின் மதச் சுதந்திரச் சட்டம் 1967-ன் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் அந்தப் பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அந்தப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 15 பேர் மீது பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்தக் கும்பல் பெண்களைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
”பெண்களைத் தாக்கிய குற்றவாளிகள் யாரென்று விடியோ பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், சட்டம- ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரிமுக்ரா கிராமத்தில் காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.