
ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவால் தனது வீட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்துவதாக தில்லி பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் கோவிட் தொற்று காலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியிருந்த போது சீஷ் மஹால் எனப்படும் தனது ஆடம்பர இல்லத்தைப் புதுப்பிக்க பல கோடி ருபாய் செலவு செய்ததாக பாஜகவினரால் முன்னர் சர்ச்சை எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் கேஜரிவால் தனது வீட்டில் தங்க முலாம் பூசிய கழிப்பறையைப் பயன்படுத்துவதாக தில்லி பாஜக தலைவர் ஆர்பி சிங் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “இதுபோன்ற தங்க முலாம் பூசிய கழிப்பறையை கேஜரிவால் தனது வீட்டில் பயன்படுத்துகிறார். ரூ. 56 கோடி மதிப்புள்ள அவரது சீஷ் மஹால் எனப்படும் ஆடம்பர வீட்டில் இதுபோல 12 கழிப்பறைகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டுமே ரூ. 1.44 கோடி” என்றார்.
மேலும், “அவர்கள் இலவசங்களைக் கொடுத்து உங்கள் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவர்களின் தவறுகள் குறித்து நாங்கள் மக்களிடம் சொல்கிறோம். இங்குள்ள கழிப்பறைகளின் நிலையைப் பாருங்கள். பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் நல்ல கழிப்பறை, குளியலறை கட்டித் தருவோம். இலவசங்களின் பெயரில் தில்லியை சூறையாட விடக்கூடாது" என்றும் ஆர்பி சிங் தெரிவித்தார்.
பாஜக தலைவர் விஜய் கோயல் கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புகள் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு மட்டுமே. அசுத்தமான குழாய் நீர், மாசுபட்ட யமுனை , காற்று மாசு, ஊழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக உழைக்காதவர்கள் இலவசங்களை அறிவித்து தேர்தலில் வெற்றி பெற விரும்புகின்றனர்" என்று விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.