”அயோத்தி ராமர் கோயில் மதச் சார்பின்மைக்குச் சான்று” -இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்

அயோத்தி ராமர் கோயிலும், அங்கு அமையவுள்ள பாபர் மசூதியும் மதச் சார்பின்மையை வலுப்படுத்தும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் தெரிவித்துள்ளார். 
அயோத்தியில் உள்ள ராமர் கோயில்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில்

திருவனந்தபுரம் : அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலும், அங்கு அமையவுள்ள பாபர் மசூதியும் மதச் சார்பின்மையை வலுப்படுத்தும்  என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் மாநில தலைவர் பாணக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் தெரிவித்துள்ளார். 

கேரளத்தின் மஞ்சேரி பகுதியில், கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்)  தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் கூறியதாவது, “பெரும்பாலான மக்களால் வணங்கப்பட்டு வரும் ராமர் கோயில் இப்போது உண்மையாக மாறியுள்ளது. இதிலிருந்து பின்வாங்க முடியாது. இதற்கெதிராக நாம் போராட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.  

நீதிமன்ற உத்தரவின் பேரில், ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.மேலும், பாபர் மசூதியும் அமையவுள்ளது. இவையிரண்டும் இப்போது இந்தியாவின் ஓர் அங்கமாக மாறியுள்ளன. மேலும், ராமர் கோயிலும் பாபர் மசூதியும் நாட்டின் மதச் சார்பின்மையை வலுப்படுத்தும் இரு சிறந்த உதாரணங்களாக மாற உள்ளன” என்று பேசினார்.

இந்நிலையில், அவர் பேசிய இந்த விடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அவரது பேச்சுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் குரல்கள் கிளம்பியுள்ளன. அவரது பேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.குன்னாலிக்குட்டி, விடியோவில் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது. ஆனால், சாதிக் அலி தங்கல்,  பொதுமக்கள் இந்த சதி வலைக்குள் விழக் கூடாது என்பதை தனது விடியோவில் எச்சரித்துள்ளார். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக”, அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com