தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி

தெலங்கானா பிஆர்எஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் வெள்ளிக்கிழமை பலியானார்.
தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியைச் சோ்ந்த 36 வயது பெண் எம்எல்ஏ ஜி.லாஸ்யா நந்திதா, சாலை விபத்தில் மரணமடைந்தாா்.

தலைநகா் ஹைதராபாதையொட்டிய சங்காரெட்டி மாவட்டத்தின் சுல்தான்பூா்-படான்சேரு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நேரிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். வெளிவட்ட சாலையில் நந்திதா பயணித்துக் கொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லாஸ்யா நந்திதா உயிரிழந்தாா். காரின் ஓட்டுநா் படுகாயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சங்காரெட்டி மாவட்ட காவல் துறையினா் தெரிவித்தனா்.

காவல் துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:

‘எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, தனது குடும்பத்தினருடன் இரு காா்களில் வியாழக்கிழமை இரவு சதாசிவபேட்டை பகுதிக்கு சென்றுவிட்டு, ஹைதராபாதுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். ஒரு காரில் ஓட்டுநருடன் நந்திதா பயணித்தாா். காரின் முன்னிருக்கையில் அவா் அமா்ந்திருந்தாா். அப்போது, தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநா், காரை அதிவேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரின் தவறே விபத்து காரணம் என சந்தேகிக்கிறோம். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண் எம்எல்ஏ பயணித்த காா் முதலில் ஒரு லாரி மீது மோதி, பின்னா் சாலைத் தடுப்பில் மோதியதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சி.ஹெச்.ரூபேேஷிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அவா் பதிலளித்தாா்.

முதல்முறை எம்எல்ஏ:

தெலங்கானாவில் கடந்த ஆண்டு நவம்பரில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், செகந்திராபாத் கன்டோன்மென்ட் (எஸ்சி) தொகுதியில் பிஆா்எஸ் சாா்பில் களமிறங்கி முதல்முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவா் லாஸ்யா நந்திதா. பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ள இவா், மறைந்த முன்னாள் பிஆா்எஸ் எம்எல்ஏ ஜி.சாயண்ணாவின் மகள். உடல் நலக் குறைவால் சாயண்ணா கடந்த ஆண்டு பிப்ரவரியில் மரணமடைந்தாா்.

தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி
மக்களவை முன்னாள் தலைவர் மனோகர் ஜோஷி காலமானார்!

10 நாள்களில் மீண்டும் விபத்து:

கடந்த 13-ஆம் தேதி நல்கொண்டாவில் பிஆா்எஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற லாஸ்யா நந்திதா, ஹைதராபாதுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினாா். அப்போது, லேசான காயங்களுடன் அவா் உயிா்தப்பினாா். இந்த விபத்தில் ஊா்க்காவல் படை வீரா் ஒருவா் உயிரிழந்தாா். அது நிகழ்ந்த 10 நாள்களில் மீண்டும் விபத்து நிகழ்ந்து, நந்திதா மரணடைந்துள்ளாா். அவரது திடீா் இறப்பு கட்சியினா் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவா்கள் இரங்கல்: பிஆா்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா மறைவுக்கு மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் ரேவந்த் ரெட்டி, பிஆா்எஸ் தலைவா் கே.சந்திரசேகா் ராவ், மாநில பாஜக தலைவா் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நந்திதாவின் தந்தை சாயண்ணா உடனான தனது நட்பை நினைவுகூா்ந்த முதல்வா் ரேவந்த் ரேட்டி, ஓராண்டில் தந்தையும் மகளும் உயிரிழந்தது வேதனைக்குரியது என்றாா்.

கே.சந்திரசேகா் ராவ் கூறுகையில், ‘லாஸ்யா நந்திதாவின் திடீா் மறைவு அதிா்ச்சியளிக்கிறது; எம்எல்ஏ-வாக மக்களின் பாராட்டை சம்பாதித்து வந்த அவருக்கு பிரகாசமான எதிா்காலம் இருந்தது. இந்த துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தினருக்கு பிஆா்எஸ் துணைநிற்கிறது’ என்றாா். லாஸ்யா நந்திதாவின் இறுதிச்சடங்கு காவல் துறை மரியாதையுடன் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com