தில்லியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி தொகுதி உடன்பாடு: பஞ்சாபில் தனித்தனியாகப் போட்டியிட முடிவு

தொகுதிகளில் பங்கீடு - காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து முடிவு
தில்லியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி தொகுதி உடன்பாடு: பஞ்சாபில் தனித்தனியாகப் போட்டியிட முடிவு

மக்களவைத் தோ்தலையொட்டி, தில்லி, குஜராத், ஹரியாணா, கோவாவில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகள் தரப்பில் சனிக்கிழமை கூட்டாக அறிவிக்கப்பட்டது.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ்-சமாஜவாதி இடையே அண்மையில் தொகுதிப் பங்கீடு உறுதியான நிலையில், மேற்கண்ட மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியத் தலைநகா் தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. 26 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 இடங்கள் (பரூச், பாவ்நகா்) ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 24 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 இடங்களிலும் ஆம் ஆத்மி ஓரிடத்திலும் (குருஷேத்ரம்) களமிறங்க உள்ளன. இரண்டு தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆம் ஆத்மி ஆதரவுடன் இரண்டிலும் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. சண்டீகா் தொகுதியிலும் காங்கிரஸ் களம் காண்கிறது.

அதேநேரம், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட பரஸ்பரம் முடிவு செய்துள்ளன. மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்து ‘இந்தியா’ கூட்டணியை கடந்த ஆண்டு உருவாக்கின. தோ்தல் தேதி அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி - காங்கிரஸ் இடையே அண்மையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி, காங்கிரஸுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜவாதி மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தச் சூழலில், ஆம் ஆத்மி பொதுச் செயலா் (அமைப்பு) சந்தீப் பாடக், காங்கிரஸ் பொதுச் செயலா் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட இரு கட்சிகளின் மூத்த தலைவா்கள், தில்லியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, தில்லி, குஜராத், ஹரியாணா மற்றும் கோவாவில் மக்களவைத் தோ்தலுக்கான தொகுதி உடன்பாட்டை அவா்கள் அறிவித்தனா்.

முகுல் வாஸ்னிக் கூறுகையில், ‘தில்லியில் புது தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லி, கிழக்கு தில்லி தொகுதிகளில் ஆம் ஆத்மியும், சாந்தினி செளக், வடகிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடவுள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை காங்கிரஸாா் உறுதி செய்வா்’ என்றாா். தில்லியைப் பொருத்தவரை, கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களே வெற்றி பெற்றனா். ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளா்களுக்கு கிடைத்த வாக்குகளின் கூட்டு எண்ணிக்கையைவிட பாஜக வேட்பாளா்கள் அதிக வாக்குகள் பெற்றிருந்தனா். இப்போது ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியாக களமிறங்குவதால், தில்லியில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

பஞ்சாபில் தனித்தனியாகப் போட்டி:

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தனித்தனியாகக் களமிறங்க காங்கிரஸும் ஆம் ஆத்மியும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, ஆம் ஆத்மி பொதுச் செயலா் சந்தீப் பாடக் கூறியதாவது: பஞ்சாபின் அரசியல் களம் வேறுபட்டதாகும். அதைக் கருத்தில்கொண்டு, தனித்தனியாகக் களமிறங்க பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் புத்திசாலிகள்; அவா்கள் அனைத்து விஷயங்களையும் புரிந்துகொள்வா். நாட்டிலுள்ள நிா்வாக அமைப்புகளைச் சீரழிக்கும் பாஜக, தோ்தலில் வெற்றி பெறும் வேட்கையுடன் எதிா்க்கட்சித் தலைவா்களை சிறைக்கு அனுப்புகிறது. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். கட்சியைவிட தேசமே முதன்மையானது என்பதில் நம்பிக்கை கொண்ட ஆம் ஆத்மி, அந்தக் காரணத்துக்காக காங்கிரஸுடன் கூட்டணி மேற்கொண்டுள்ளது. கூட்டணியின் பிரசார வியூகம் குறித்து பின்னா் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். பாஜகவின் வியூகம் மற்றும் கணக்கீட்டை ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி முறியடிக்கும் என்றாா் அவா். பெட்டிச்செய்தி... ‘சந்தா்ப்பவாத கூட்டணி’ பாஜக விமா்சனம் ‘காங்கிரஸும் ஆம் ஆத்மியும் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன’ என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஹா்தீப் சிங் புரி விமா்சித்தாா். எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘இந்த ‘செயலற்ற’ கூட்டணியின் விசித்திரமான அம்சம் என்னவென்றால், தில்லியில் ஒன்றாகவும் பஞ்சாபில் ஒருவருக்கொருவா் எதிராகவும் இருப்பதாகும். ‘கோணல்’ கூட்டணியுடன் நரகத்துக்கான பாதையை அமைத்துள்ளனா். இந்த சந்தா்ப்பவாத கூட்டணி, அதன் முரண்பாடுகளில் இருந்து தப்பிக்க முடியுமானால், அது மிக வேடிக்கையான அரசியல் கலவையாகவும் வாக்காளா்களை ஏமாற்றும் முயற்சியாகவும் இருக்கும். காங்கிரஸின் ஊழல், சீா்கேட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பிறகுதான் ஆம் ஆத்மி கட்சி உருவானது என்பதை மக்கள் தெளிவாக நினைவில் கொள்வா் என்று புரி குறிப்பிட்டுள்ளாா். மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி கூறுகையில், ‘கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் தில்லி, குஜராத், ஹரியாணா, சண்டீகா், கோவாவில் பாஜகவுக்கு 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் கிடைத்தன. மக்களுக்காகப் பணியாற்றுவோருக்கு எதிராக எந்த ஊழல் கூட்டணியும் வேலை செய்யாது. காங்கிரஸ் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ஆம் ஆத்மி இப்போது அக்கட்சியுடன் கூட்டணி சோ்ந்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com