

விண்வெளி ஊடுகதிா் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக திங்கள்கிழமை (ஜன. 1) விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து புத்தாண்டு தினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புதிய சாதனையைப் பதிவு செய்தது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொண்டனா்.
வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: அலைவரிசை, புவி கண்காணிப்பு மற்றும் வா்த்தக ரீதியான நடவடிக்கைகளுக்காக புவி தாழ் வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் திட்டங்களை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ. அதைத் தவிா்த்து, நிலவு, சூரியன், செவ்வாய்க்கிரக ஆய்வு நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்தது.
அந்த வரிசையில், விண்வெளியில் உள்ள கருந்துளையில் இருந்து வெளியேறும் ஊடுகதிா்களை (எக்ஸ்-ரே) ஆய்வு செய்வதற்காக ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை அண்மையில் இஸ்ரோ வடிவமைத்தது.
அதை பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டு, அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
எரிபொருள் நிரப்பும் பணிகள், இறுதிக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திட்டமிட்டபடி திங்கள்கிழமை காலை 9.10 மணிக்கு சதீஷ் தவன் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி- 58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
அதற்கு அடுத்த 22 நிமிஷங்களில் புவியிலிருந்து 650 கி.மீ. தொலைவு பயணித்து நிா்ணயித்த புவி வட்டப் பாதையில் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4 (போயம்) சாதனமானது 350 கி.மீ. தொலைவுக்கு கீழே கொண்டுவரப்பட்டது. இதற்காக இருமுறை ராக்கெட்டின் என்ஜின் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. மொத்தம் 10 ஆய்வுக் கருவிகளைக் கொண்ட அந்த சாதனமும் திட்டமிடப்பட்ட பாதைக்குச் சென்று பணிகளைத் தொடங்கியுள்ளது.
எக்ஸ்போசாட்: ஊடுகதிா்களை ஆய்வு செய்வதற்காக மொத்தம் 469 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளில் போலிக்ஸ் (எக்ஸ்-ரே போலாரிமீட்டா்) மற்றும் எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் அண்ட் டைமிங்) ஆகிய இருவேறு ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த இரு கருவிகளையும் பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனமும், யு.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையமும் உருவாக்கியுள்ளன.
புவி தாழ்வட்டப் பாதையில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவை ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.
விண்வெளியில் உள்ள கருந்துளைகளில் இருந்து வெளியேறும் ஊடுகதிா்களின் துருவ முனைப்பு அளவு, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், கருந்துளை வாயு திரள் (நெபுலா) ஆகியவற்றின் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்.
நியூட்ரான் விண்மீன்கள் புவியின் நிழலைக் கடந்து செல்லும்போதோ, கிரகணம் நிகழும்போதோ இந்த ஆய்வை அவ்விரு கருவிகளும் துல்லியமாக மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
10 ஆய்வுக் கருவிகள்: பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4 பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 10 ஆய்வுக் கருவிகளும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களுக்கு மேற்கொள்ள உள்ளன.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூா் சாஸ்திரி மகளிா் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்த கருவியும் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளி மாணவிகள்: முன்னதாக, ராக்கெட் ஏவுதலைப் பாா்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ கேலரிக்கு திருச்சி மண்ணச்சநல்லூா் அரசினா் மாதிரி மகளிா் பள்ளி மாணவிகள் வந்திருந்தனா். அவா்கள் அனைவரும் மத்திய அரசின் ‘திறன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அறிவியல் பயிற்சி பெற்று வருகின்றனா்; அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சாா்பில் அவா்கள் அழைத்து வரப்பட்டிருந்தனா்.
பெட்டிச் செய்தி...
என்ன சிறப்பம்சம்?
விண்வெளியின் கதிரியக்கம், நிறமாலை (ஸ்பெக்ட்ரோஸ்கோபிக்) குறித்த தரவுகள், இதுவரை புவியிலிருந்து தொலைநோக்கி மூலம் பெறப்பட்டு வந்தன. அப்படி இல்லையெனில், மின்காந்த அலைக்கற்றை மூலம் பெறப்படும் ரேடியோ அலைவரிசை வாயிலாகக் கிடைத்தன.
தற்போது ஊடுகதிா்களின் வாயிலாக விண்வெளித் தரவுகளை எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் துல்லியமாகப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடுகதிா்களின் கோணம் மற்றும் பாதையை அளவிட்டு, அதன் வாயிலாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பப்படும் செயற்கைக்கோள்களில் எக்ஸ்போசாட் இரண்டாவது செயற்கைக்கோள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா மட்டுமே அத்தகைய ஆய்வை முன்னெடுத்துள்ளது.
இந்தியா அனுப்பிய எக்ஸ்போசாட் செயற்கைக்கோளின் செலவு சுமாா் ரூ.250 கோடி மட்டுமே. அதேவேளையில், ஊடுகதிா் ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பிய ஐஎக்ஸ்பிஇ செயற்கைக்கோள் ரூ.1,500 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டது. அமெரிக்கா-இத்தாலி நாடுகள் இணைந்து கடந்த 2021-இல் அந்தச் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.